பொருளாதாரம் சரிவடைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு மோடி பதிலடி

டெல்லி: ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம் என பிரதமர் மோடி பேசினார்.

டெல்லியில் இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:

சிலர் அவநம்பிக்கையை பரப்புவதில் மகிழ்கின்றனர். இப்படி பரப்பிய பிறகுதான் இரவில் நன்றாக உறங்குவார்கள்.

ஆண்டின் ஒரு காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததே, அவர்களுக்கு இருண்ட காலமாகத் தெரிகிறதாம். நான் கேட்கிறேன், இப்போதுதான், முதன் முதலாக வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்ததா? முந்தைய ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்த 6 சம்பவங்களை காண்பிக்க முடியும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

சில காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம் அல்லது 1 சதவீதமாக கூட இருந்துள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜிடிபிக்கு ரொக்க விகிதம் 9 சதவீதமாக குறைந்தது, நவம்பர் 8ம் தேதிக்கு முன்பாக இது 12% ஆக இருந்தது. இது குறைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம் என்ற தைரியமான முடிவை இந்த அரசே எடுக்க முடியும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும்

நான் பொருளாதார நிபுணரும் அல்ல, அவ்வாறு நான் கூறிக்கொண்டதும் இல்லை. இந்தியா பலவீனமான 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது. பொருளாதார நிபுணரின் (மன்மோகன்சிங்) ஆட்சியில் இது எப்படி நடந்தது என்று ஆச்சரியமடைந்தனர். ஜிஎஸ்டி அறிமுகமாகி 3 மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கு அதுபற்றிய கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அனைத்துப் பிரச்சினைகளையும் பரிசீலனை செய்யவும் என்று கூறியுள்ளேன்.

வணிகர்களுக்கு உறுதி

நாடு முழுதும் உள்ள வணிகர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புவது இதுதான், நாங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் என்று கூறிக்கொள்ளவில்லை. இந்த அரசு உங்கள் பக்கம் உள்ளது. ஜிஎஸ்டியை இன்னும் எளிமையாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஜூன் மாதத்திலிருந்து வணிக வாகனங்கள் விற்பனை 23 சதவீதமும், பயணிகள் வாகன விற்பனை 12 சதவீதமும், இரு சக்கரவாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு விமர்சனம் செய்வோர் என்ன சொல்வார்கள்?

வாழ்க்கை மேம்பாடு

உள்நாட்டு விமான போக்குவரத்து 14% அதிகரித்துள்ளது. சரக்கு விமான போக்குவரத்து தொடர்பான நடவடிக்கைகளில் 16% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதே, இதை பொருளாதார வீழ்ச்சி என கூறுவார்களா? உங்களுடைய கடின உழைப்பும் அதற்காக நீங்கள் ஈட்டும் வருவாயின் மதிப்பினை இந்த அரசு நன்கு புரிந்து கொள்கிறது, இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதில் தான்.

பொருளாதாரம் வளரும்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 6 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் வெறும் 5.7 சதவீதம் தான் இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் இருந்த பின்னர், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் வரும் காலாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: