அலி ஹம்சா கூற்று அதிர்ச்சியளிக்கிறது: கிட் சியாங் சீற்றம்

ஆசிரியர்களை   அம்னோவில்  சேரச்  சொல்வதில்   தப்பேதுமில்லை   என்று   கூறியுள்ள  அரசாங்கத்  தலைமைச்   செயலாளர்   அலி  ஹம்சாவை   டிஏபி  நாடாளுமன்றத்   தலைவர்   லிம்  கிட்  சியாங்   சாடினார்.

அலியின்  கூற்று   அதிர்ச்சியளிக்கிறது   என்றவர்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“இதே  அலி,  ஆசிரியர்கள்   டிஏபி-இலும்   மற்ற   பக்கத்தான்  ஹரபான்  கட்சிகளிலும்   சேரலாம்   என்றும்   சொல்வாரா?

“மாட்டார்  என்றால்,   ஆசிரியர்கள்  அம்னோவில்  சேரலாம்   ஆனால்   டிஏபி-இலோ  மற்ற   ஹரபான்  கட்சிகளிலோ   சேரக்  கூடாது   என்று  (பொதுச்  சேவை)  பொது  ஆணகளில்   எந்த   இடத்தில்   கூறப்பட்டுள்ளது   என்பதைத்   தலைமைச்   செயலாளர்   சொல்வாரா?”,  என்றவர்  வினவினார்.

நேற்று   மாலை   அலி   ஹம்சாவிடம்,   செவ்வாய்க்கிழமை  புத்ரா  ஜெயா   பள்ளி   நிகழ்வு   ஒன்றில்  கலந்துகொண்ட  கூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்    தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   ஆசிரியர்கள்   அம்னோவில்   சேர    வேண்டும்  என்று   வலியுறுத்தியது  குறித்து     கேட்கப்பட்டது.

அதற்கு  அலி  ஹம்சா  “அதில்  ஒன்றும்  பிரச்னை  இல்லை”   என்று  கூறியதாக   ஃப்ரி  மலேசியா  டுடே   அறிவித்திருந்தது.

பொதுச்  சேவை  ஊழியர்கள்   அரசியலில்   ஈடுபடுவதைத்   தடுக்கும்   விதிமுறைகள்  இருக்கின்றவே  என்று   கேட்டதற்கு   அவர்  பதில்  அளிக்கவில்லை.