பி.எஸ்.எம். : வீடுடைப்பு விவகாரம், அஸ்மின் அலியின் நிலைபாடு என்ன?

சுபாங் விமான நிலையப் பள்ளிவாசல் பணியாளர்களின் வீடு மற்றும் கடையை இடித்துத் தள்ளிய விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்னவென்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விளக்க வேண்டுமென்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது.

சுபாங் விமான நிலைய மசூதி கட்டப்பட்ட போது, அதன் வளாகத்தைச் சுற்றி வீடுகள் கட்டி, குடியேற அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைகுறித்து, மாநில அரசாங்கத்தின் நிலைபாடு என்னவென்று அஸ்மின் அலி கூற வேண்டுமென, பி.எஸ்.எம்.-மின் தலைமை செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் ஓர் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

“மாநில அரசாங்கம், அவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாக பார்க்கிறதா அல்லது 20 ஆண்டுகள் அவ்விடத்தில் வாழ்ந்தவர்கள் என்ற முறையில், அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்ற வகையில் அவர்களைக் கையாளப்போகிறதா?” என்று சிவராஜன் கேட்டார்.

ஐக்கிய நாடுகளின் பிரகடனம், கட்டாய வெளியேற்றத்தை எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.

“நேற்று இரவு நடந்தது ஒரு கட்டாய வெளியேற்றமாகும், அதாவது வேறு ஒரு மாற்று இடம் இல்லாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்,” என்றார் சிவராஜன்.

முன்னதாக, சுபாங் விமான நிலைய மசூதியைச் சேர்ந்த குடியிருப்பு மற்றும் கடைகளை இடித்துத் தகர்த்தெடுக்கும் நடவடிக்கைக்கு அரசு தடை விதிக்கவில்லை என ஒரு தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இதற்கிடையே, போலிஸார் தங்களது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, ஒன்பது நபர்களைக் கைது செய்தனர், அவர்களில் பி.எஸ்.எம். தலைமை செயலாளர் சிவராஜன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் பிரிவைச் சார்ந்த சிலரும் இருந்தனர்.

செப்டம்பர் 28-ம் தேதி, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்போதும், வீடுகளை இடித்துத் தள்ளியது வருத்தமளிப்பதாக உள்ளது என்று மசூதியின் முன்னாள் பிலால் அப்துல் ரசாக் சைட் கூறினார்.

“இப்பிரச்சனையில் மந்திரி பெசார் தலையிட்டு, சுமூகமாகத் தீர்வுகாண வேண்டுமென்று பாதிக்கப்பட்டவர்கள் விரும்புகின்றனர்,” என்று சிவராஜன் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட இருவரும், செப்டம்பர் 8-ம் தேதி, அரசு உதவி பெற மந்திரி பெசார் அலுவலகத்திற்கு மூன்றாவது முறையாக சென்றனர். ஆனால், இன்றுவரை மாநில அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை,” என்று சிவராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், கோத்தா டாமான்சரா , செக்‌ஷன் 8, மக்கள் வீட்டுத் திட்டத்தில் (பி.பி.ஆர்.) , அந்த இரண்டு குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க, மாநில அரசு ஒப்புக் கொண்டதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

இதற்கிடையே, கைது செய்யபட்ட அனைவரும் நேற்று மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.