கேட்டலோனியா தலைவர் பூஜ்டியமோனை கண்டித்த ஸ்பெயின்

(இடது) கார்லஸ் பூஜ்டியமோன், (வலது) அரசர் ஆறாம் ஃபெலிப்பே

கேட்டலானின் சுதந்திரத்தை அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாக அதன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் அரசாங்கம், நாங்கள் இந்த மிரட்டலுக்கு அஞ்சபோவதில்லை என கூறியுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கேட்டலான் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் சட்டத்தின் பாதைக்கு திரும்ப வேண்டும். அதன் பின்தான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மன்னர் குறித்த கார்லஸின் விமர்சனங்கள், அவர் நிஜத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஸ்பெயின் அரசர் ஆறாம் ஃபெலிப்பே, ஸ்பெயினிலிருந்து பிரிந்துச் சென்று தனி நாடு அமைப்பதற்காக நடந்த வாக்கெடுப்பை ஜனநாயகத்துக்கு மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்தார்.

இது குறித்து பேசிய கார்லஸ் பூஜ்டியமோன், அரசர் வேண்சுமென்றே கேட்டலான் மக்களை புறக்கணித்துவிட்டார் என்றார். அரசர் ஸ்பெயின் அரசாங்கத்தின் சார்பாகவே நடந்துக் கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.

சூழ்நிலை அரசர் மத்தியஸ்தம் செய்ய கோருகிறது. ஆனால், ஸ்பெயின் அரசியலமைப்பு அரசருக்கு வழங்கி இருக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்று புதன்கிழமை மாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பூஜ்டியமோன் கூறி உள்ளார்.

அந்த அறிக்கையில் எப்போது கேட்டலான் சுதந்திரத்தை அறிவித்துக் கொள்ளப் போகிறார் என்பது குறித்த தகவல் இல்லை. -BBC_Tamil