ஏலத்திற்குச் சென்ற தனது வீட்டை பிஎஸ்எம் உதவியுடன் சுந்தரம் கோவிந்தராஜூ மீண்டும் பெற்றார்

 

ஏலத்திற்குச் சென்ற தனது வீடு, மீண்டும் கிடைத்ததை அறிந்து சுந்தரம் கோவிந்தராஜூ நிம்மதி பெருமூச்சுவிட்டார். மலேசிய சோசலிசக் கட்சியின் துணையுடன் அந்த வங்கியின் நடவடிக்கையை எதிர்த்து போராடியது வீண் போகவில்லை.

கிள்ளான் துறைமுகத்தில் சாதாரண உடல் உழைப்பாளியான சுந்தரம், தான் வசித்து வந்த திதிடிஐ ஷாஆலாம், கம்போங் சவ்ஜான வீடு உடைக்கப்பட்ட பின், தாமான் மெலேவாரில், இந்த மலிவு விலை வீட்டை ரிம42,000 த்திற்கு வாங்கி குடியேறினார். இவ்வீட்டை வாங்க சிஐஎம்பி (CIMB) வங்கியில் ரிம 39,434.00 -ஐ கடனாகப் பெற்றார்.

துரதிஷ்டவசமாக, கடந்த ஏப்ரல் 5, 2014 இல் சுந்தரன் விபத்துக்குள்ளாகி முதுகெலும்பு மற்றும் நரம்பு பாதிக்கப்பட்டது. சமுகப் பாதுகாப்பு அமைப்பு இவர் நிரந்தர, உடல் இயலாமை நிலையை அடைந்துள்ளதாகஉறுதிபடுத்தியது. மேலும், சமுகநல இலாகா மாற்றுத்திறனாலிக்கான அட்டையை வழங்கியுள்ளது.

அடமான குறைப்பு உத்தரவாத குழுவின் (எம்.ஆர்.தி.ஏ.) காப்புறுதியைப் பெற தகுதி இருந்ததால், மீத கடனை சன் லைஃப் காப்புறுதி நிறுவனத்தின் எம்.ஆர்.தி.ஏ.வுக்கு விண்ணப்பம் செய்ய வங்கியிடம்கோரியும், அவரின் வீடு கடந்த ஜூலை 17, 2017 இல் ரிம134,000 த்திற்கு ஏலம் விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 4, 2017 இல் சுந்தரன், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள சி.ஐ.எம்.பி, தலைமை அலுவலகத்தின் முன், நியாயம் கேட்டு போராட்டத்தில் இறங்கினார். அதன் பிறகு, பி.எஸ்.எம். அவ்வங்கியின், வாடிக்கையாளர் தீர்மானப் பிரிவு அதிகாரியின் உதவியுடன் இப்பிரச்சனையை அணுகிவந்தது.

தற்போது, இந்த வீட்டை ஏலத்தில் வாங்கிய சொத்து முகவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிஐஎம்பி வெற்றிகண்டுள்ளது. சி.ஐ.எம்.பி. தலைமையகம் தாமாகவே, எம்.ஆர்.தி.ஏ. காப்பீட்டின் வழி, அந்த வீட்டுக் கடன் நிலுவையைச் செலுத்த முடிவாகியுள்ளது.

தற்போது, சிஐஎம்பி வங்கி அனைத்து வீட்டுக் கடன்களும் கட்டி முடித்தாகிவிட்டது எனக் கூறி, வீட்டைஅவரிடம் ஒப்படைக்க, திரு சுந்தரத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடன் வாங்கும்போது வங்கி மற்றும் வீடு வாங்குவோர் இடையிலான கடன் ஒப்பந்தத்தில் இருக்கும்குறைபாடுகளே இதற்குக் காரணம் என பி.எஸ்.எம். எண்ணுகிறது. இதுவே, வீட்டை வாங்கியவர், வீடு மீதானதனது உரிமைகள் அனைத்தையும் அடகு வைக்க காரணமாக அமைந்துவிடுகிறது.

எனவே, நமது நாட்டில் தனியார் வங்கிகளைக் கண்காணிக்கும் நிறுவனமான தேசிய வங்கி (பேங்க் நெகாரா) இந்த பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டுமெனக் கோரி, பி.எஸ்.எம். ஒரு மனுவைத் தயாரித்து வழங்கவுள்ளது என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர் அ. சிவராஜன் கூறினார்.