தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: ராஜித சேனாரத்ன

தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது.

வழக்கு இல்லாதவர்களை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்தக் கைதிகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை விடுவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

சட்டத்தில் உள்ள தவறினால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த போது அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இது பற்றி பேசப்பட்டது. இந்த கைதிகளில் வழக்குகள் உள்ள கைதிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஏனையவர்களினும் நிலைப்பாடாக இருந்தது.

இவர்களை தேவையின்றி தடுத்து வைப்பதில் எந்த பயனும் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜே.வி.பியின் முதலாவது கலவரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களே தான் ஜே.வி.பிக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். புலிகள் இயக்கத்திலும் அவ்வாறான நிலையே ஏற்பட்டது. புலிகள் மகளிர் அணித்தலைவி தெரிவித்த விடயங்கள் முக்கியமானவை. வழக்குத் தொடரக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வழக்குகள் இன்றேல் கைதிகளை விடுவிக்க வேண்டும் .பயங்கரவாதிகள் என்று கூறி பொய்யாக தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது.மோதல்கள் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. இனியும் தாமதிப்பது உகந்ததல்ல. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் தாமதம் நடக்கிறது.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: