பினாங்கு ஃபோரம் : நிலச்சரிவு அபாயங்கள் குறித்து 2 முறை கேள்வி எழுப்பியுள்ளோம்

தஞ்சோங் பூங்கா கட்டுமான தளத்தில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதை, பினாங்கு அரசுக்கு இரண்டு முறை தெரியப்படுத்தி உள்ளதாக, அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான ‘பினாங்கு ஃபோரம்’  தெரிவித்தது.

இவ்வாண்டு மட்டும் இரண்டு முறை, ஜனவரி மற்றும் மே மாதங்களில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் இருப்பதால், இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு ஹில் வாட்ச்  மாநில அரசைக் கேட்டுக்கொண்டதாக அவ்வமைப்பின் பிரதிநிதி டாக்டர் லிம் மா ஹுய் தெரிவித்தார்.

“அத்தளத்தில் நடந்துவந்தக் கட்டுமானப் பணிகள் மற்றும் மலையை வெட்டியெடுக்கும் பணிகளின் படங்கள் மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், ‘அங்கு நடந்துவரும் பணிகளைக் கண்காணித்து வருவதாக’ மாநில அரசு பதிலளித்தது,” என்றார் அவர்.

“எங்கள் இரண்டாவது அறிக்கை, சில ஆய்வுத் தரவுகளுடன் , மாநில அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது. இதற்கு அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை,” என அவர் இன்று ஜார்ஜ் டவுனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இரண்டு அறிக்கைகளும் மாநில நிர்வாக குழுவில் இருக்கும் ச்சோவ் கொன் யூ-விடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜனநாயகச் செயற்கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்திடம், மலைப்பகுதிகளில் நடந்துவரும் மேம்பாட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பினாங்கு ஃபோரம்  கோரிக்கை வைத்தது, ஆனால், மாநில அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் லிம் தெரிவித்தார்.

“அந்த அலட்சியப் போக்கு, இன்று மண் சரிவு ஏற்பட்டு, இத்தனை உயிர்களைப் பலி கொண்டுவிட்டது,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

மலைப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வழிகாட்டியில் கூறியுள்ளதைப் போல், பினாங்கின் உள்ளூர் அதிகாரிகள் மலேசிய வளர்ச்சிக்கு விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிப்பதற்காகவும் தங்கள் ஜியோடெக்னிகல் யூனிட்களைப் பலப்படுத்தி, கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

பினாங்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் (பி.பீ.டி.) மேம்பாட்டுக்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன், தங்கள் ஜியோடெக்னிகல் யூனிட்- களை வலுப்படுத்தி, கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு; தொடர்ந்து கண்கானித்தும் வருவர் என்று முதல் அமைச்சர் லிம் குவான் எங் கூறியிருந்ததாகவும் லிம் தெரிவித்தார்.

“அதற்குப் பின் நடந்தது என்ன? மாநில அரசும் பி.பீ.டி.-யும் வழிகாட்டியில் கூறியுள்ளதை நடைமுறைபடுத்தி வந்தனரா அல்லது அலட்சியப் போக்குடன் இருந்தனரா, என்பதே தற்போதயக் கேள்வி,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.  – பெர்னாமா