மெர்சல் திரைப்படத்தை முன்வைத்து அடேங்கப்பா ‘பேரங்கள்’… அதிர வைக்கும் பரபர தகவல்கள்

சென்னை: மெர்சல் திரைப்படத்தை எதன் எதன்பெயராலோ எதிர்க்கிறோம் என்பதை முன்வைத்து நடந்த பண பேரங்கள் ரொம்பவே அதிர வைக்கின்றன.

மெர்சல் திரைப்படத்துக்கு நாடறிந்த தயாரிப்புதான் முதலீடு போட்டிருக்கிறது. அதேநேரத்தில் இப்போது கூப்பாடு போடுகிறவர்களின் ‘தலை’யும் கூவக் கரையோர தியேட்டர் உரிமையாளர் மகன் மூலமாகவும் முதலீடு போட்டிருக்கிறார்.

தியேட்டர் உரிமையாளர், ஹோட்டல் உரிமையாளர் என பன்முகம் கொண்ட அந்த நபருக்கு ‘தலை’யின் கட்சியிலும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் மெர்சல் திரைப்படம் வெளிவருவதில் சிக்கலே இருக்கக் கூடாது என்பதில் பினாமி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

இதனால்தான் பிராணிகள் தரப்பு சிக்கல் கிளப்பிய போது தலையின் பினாமிதான் கட்டப் பஞ்சாயத்துக்கு களமிறங்கியது. அங்கிட்டு பெரிய ஒன்று கேட்க பினாமி அப்படி இப்படி பேசி அரையில் முடித்து கொடுத்தது. எல்லாமுமே நல்லாவே போய் கொண்டிருந்தது.

தலையின் முதலீடும் இருக்கிறது என்பதை தெரியாமலேயே திடுதிடுப்பென மெர்சலுக்கு போர்க்கொடி எழுந்தது. இதற்கு காரணமும் பேரங்கள்தானாம்.. கூவுகிற சப்தத்துக்கு காசு கிடைக்குமே என்கிற நப்பாசைதான். ஆனால் சம்பந்தப்பட்டிருப்பது தலை என்பதால் தயாரிப்பு தரப்பும் கெத்தாகவே இருக்கிறது.

இப்படியெல்லாம் வரும் என நினைத்துப் பார்க்காததால் மிரண்டு போன தலையும் கூட்டத்துடன் கோவிந்தா போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேநேரத்தில் மெர்சலுக்கு எதிராக பெரிய அளவு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் எனவும் பினாமிக்கு அட்வைஸும் செய்திருக்கிறார் தலை. இதனால்தான் ஒரு பக்கம் கூப்பாடு கூச்சல் இருந்தாலும் மறுபக்கம் சைலண்ட்டாக படமும் பஞ்சாயத்தே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

tamil.oneindia.com