சென்னையில் மீண்டும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை, 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை,

தமிழ்நாட்டில் 27.10.2017 அன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று காலையில் வெயில் தலை காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் நகரின் அநேக இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் சில பகுதிகளில் மழை நீடித்தது. இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இன்று காலை பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையே காணப்பட்டது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் வெயில் தொடங்கியது. மாலை நகரின் அநேக இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. 8 மணிக்கு பிறகு மழை பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. சென்னை அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா சாலை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்கிறது. மழை காரணமாக மீண்டும் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல்வேறு பகுதியில் தேங்கி இருக்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக நாகை – சென்னை நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com

TAGS: