ஷாபி: நஜிப் ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்பது முட்டாள்தனமானது

 

பிரதமர் நஜிப் ரிம9.5 மில்லியனை வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு கொடுத்தார் என்று கூறப்பட்டு வந்துள்ளது பற்றி இதுவரையில் மௌனமாக இருந்து வந்த அவர், அவ்வாறு கூறப்படுவதை முட்டாள்தனமானது என்று கூறினார்.

அன்வார் இப்ராகிமின் தகா உறவு வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராகச் செயல்பட்ட ஷாபி, அக்குற்றச்சாட்டை “முட்டாள்தனமானது” என்று வர்ணித்தார்.

தாம் அது குறித்து கருத்து கூற விரும்பியதாகவும், ஆனால் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் தம்மால் கருத்து கூற முடியவில்லை என்றாரவர்.

“அந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படியும் அதற்கு ஆதரவான ஒரு சத்தியப் பிரமாணத்தையும் நான் பதிவு செய்தேன். அது மொத்தமான முட்டாள்தனம் என்று நான் இப்போது கூற முடியும். நான் பதிவு செய்த சத்தியப் பிரமாணத்திலும்கூட அது இருக்கிறது”, என்று ஷாபி இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சந்தித்த போது மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக, தமது தகா உறவு வழக்கு IIஇல் குற்றவாளி எனத் தமக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை சரவாக் ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தள்ளி வைக்க அன்வார் இப்ராகிம் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்த அன்வாரின் வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லத்தீபார் கோயா, இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அன்வார் தங்களுக்கு கட்டளையிட்டிருப்பாத கூறினர்.

சரவாக் ரிபோர்ட்டில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நஜிப் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இன்றுவரையில் அவர் எதுவும் கூறாமல் இருக்கிறார் என்று சுரேந்திரன் கூறினார்.

சரவாக் ரிபோர்ட்டில் ஷாபி அரசாங்க வழக்குரைஞராக பணியாற்றியதற்கு நஜிப் அவருக்கு 2013 மற்றும் 2014 இல் மொத்தம் ரிம9.5 மில்லியன் கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

2015 இல், இந்த வழக்கில் அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞராக பணியாற்றியதற்கு சம்பளமாக ஷாபிக்கு ரிம1,000 கொடுக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கூறியது.

இக்குற்றச்சாட்டு சரவாக் ரிப்போர்ட்டில் வெளியானதிலிருந்து ஷாபி அவ்விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தார்.