பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தொடர்கின்றன

 

 

பினாங்கில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடைகள் ரொக்கமாகவும் பொருள்களாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று ரிம1.04 மில்லியனை பல நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட போது கூறினார்.

சிலாங்கூர் அரசிடமிருந்து ரிம1 மில்லியன் மற்றும் ஜோகூர் காற்பந்து மன்றத்திடமிருந்து ரிம500,000 க்கான காசோலைகளைகள் கிடைக்கப் பெற்றதாகவும் குவான் எங் அறிவித்தார்.

ரொக்க நன்கொடைகளைத் தவிர்த்து, மருத்துவமனைகள், வணிகர்கள் ஆகியோரும் உதவ முன்வந்துள்ளனர்.

நன்கொடைகள் சம்பந்தமான தகவலை www.penangbangkit.co. வலைத்தளத்தில் காணலாம்.

இதனிடையே, பினாங்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரிம1 பில்லியன் கொடுக்க ஒப்புதல் அளிப்பது பற்றி கவனிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி பிரதமரை குவான் எங் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 7 இல் அவர் மேற்கொண்ட வருகைக்குப் பின்னர். பிரதமர் நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதோடு மாநிலத்திற்கோ பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த உதவியும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவர் இந்த விவகாரத்தை விரைவுபடுத்துவார் என்று நம்புவதாக குவான் எங் மாநில சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நஜிப் அவரது வருகையின் போது அந்த குறிப்பிட்ட நிதியை அளிக்க வாக்குறுதி அளிக்கவில்லை. மாநிலத்தில் ரிம1 பில்லியன் செலவாகக்கூடிய 13 வெள்ளக்கட்டுபாடு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதற்காக புத்ரா ஜெயா ஏற்கனவே ரிம150 மில்லியனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.