பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டத்தை ரோஸ் அங்கீகரிக்கவில்லை

 

நவம்பர் 2 இல் நடைபெற்றது பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டம் என்று அக்கட்சி கூறிக்கொண்ட போதிலும், மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) அதை “உச்சமன்றத்தின் கூட்டம்” என்று வர்ணித்துள்ளார்.

“நவம்பர் 2, 2016 இல் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தியதாக பெர்சத்து கூறுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அது ஒரு உச்சமன்ற கூட்டமே தவிர சிறப்புப் பொதுக்கூட்டம் அல்ல.

“2016 ஆண்டுக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பை ரோஸ் ஆய்வு செய்துள்ளது. அதில் 12 உச்சமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது”, என்று தலைமை இயக்குனர் சுரியாத்தி இப்ராகிம் கூறினார்.

இக்கூட்டத்தில் பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் பெயரை அர்மடா என்று மாற்றுவதற்கு பெர்சத்து அதன் சட்டவிதிகளில் திருத்தம் செய்தது.

அர்மடா என்ற சொல்லைப் பயன்படுத்துவது கட்சியின் விதிகளுக்கு முரணானது. அது கட்சியின் பதிவு இரத்து செய்ய வழி வகுக்கும் என்று பதிவாளர் கூறினார்.

இதனிடையே, பெர்சத்து அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தள்ளிப் போடுவதற்கு மனு செய்துள்ளது குறித்து கருத்துரைத்த சுரியாத்தி, அது போன்ற தாமததத்திற்கு வகை செய்யும் விதிகள் ஏதும் பெர்சத்துவின் சட்டவிதிகள் இல்லை. இது அக்கட்சியின் பதிவு இரத்து செய்வதில் முடியும் என்றார்.

ஆனால், பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் ஷாருடின் முகமட் சாலே, கட்சி அதன் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவாக பொதுக்கூட்டம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போட வேண்டும் என்று கூறினார்.