இப்ராஹிம்: என் பிணத்தைத் தாண்டிசென்று, சம உரிமை கேளுங்கள்

நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையேப் பரவிவரும் ‘சம உரிமை’ எனும் நோயை எதிர்ப்பதாகப் பெர்காசா கூறியுள்ளது.

அரசாங்கம் சமத்துவ உரிமைகளை வழங்கினால், அது மத்திய அரசியலமைப்பில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதன் தலைவர் இப்ராஹிம் அலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாம் மதத்திற்கு ஈடாக, மலேசியாவில் உள்ள மற்ற மதங்களின் தரத்தை உயர்த்துவதை நாங்கள் விரும்பவில்லை. பூமிபுத்ராக்களுக்கு நிகராக, அடிப்படை சமூக பொருளாதாரத்தை, குடியேறியவர்களுக்கும் கொடுப்பதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது,” என்றார் அவர்.

தாமான் தாசேக் தித்திவாங்சா அரங்கில் நடந்த, பெர்காசாவின் 8-வது வருடாந்த பொது மாநாட்டில் உரையாற்றிய போது, “அவர்கள் அதனை நடைமுறைபடுத்தும் முன், என் பிணத்தைத் தாண்டி சென்று, சமநிலையை ஏற்றுக்கொள்ளட்டும்,” என அவர் பேசினார்.

அவர், மலாய் மொழிக்கான 152-வது பிரிவு மற்றும் பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகள் தொடர்பான 153-வது பிரிவு பற்றியும் குறிப்பிட்டார்.

இனவாதப் போராளிகள், ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பூமிபுத்ராக்களுக்கும் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் இடையே வெறுப்புணர்வைத் தூண்டிவிட வேண்டாம் என பெர்காசா கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

“மலேசியாவையும் பூமிபுத்ராக்களையும் அழித்துவிடாதீர்கள், பேரினவாத அரசியலுக்கு இந்நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் கூறினார்.