குலா: வெற்றிக்கு இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் திறவுகோலாகிறது

 

அடுத்த பொதுத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் சாவியாக சிறுபான்மையினரான இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்று பக்கத்தான் ஹரப்பானின் உதவித் தலைவர் மு. குலசேகரன் கூறுகிறார்.

சீனர்களின் வாக்குகளை திரட்டுவது அவரின் தகுதிக்கு அப்பாற்பட்டதாகி விட்டதாக பிரதமர் நஜிப் கருதுகிறார் என்று நேற்றிரவு நெகிரி செம்பிலான் டிஎபி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய குலா கூறினார்.

13 ஆவது பொதுத் தேர்தலில் சீனர்கள் மிகப் பெரிய அளவில் எதிரணிக்கு வாக்களித்தனர்.

“எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு நஜிப் இந்தியர்களின் மீது கவனம் செலுத்துகிறார். இனிப்புகளைக் கொடுத்து இந்தியர்களை மயக்கிவிடலாம் என்று அவர் நம்புகிறார்

“நஜிப் இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பது பற்றி ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தியிடம் கேளுங்கள்”, என்று சுமார் 500 இந்தியர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் குலா கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் எவ்வளவு முக்கியமனாது என்பதை ஹரப்பான் தலைவர் மகாதி முகமட் அக்கூட்டணியின் தலைமைத்துவை மன்றக் கூட்டங்களில் விடாப்பிடியாக வலியுறுத்தி வருவதாக குலா தெரிவித்தார்.

61 நாடாளுமன்ற இருக்கைகளின் முடிவை இந்திய வாக்குகள் தீர்மானிக்கும்; சீனர்களின் வாக்குகள் கிடைக்காது மற்றும் மலாய்க்காரர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கிடையில் சிதறிவிடும்.

“ஆகவே, நீங்கள்தான் 14 ஆவது பொதுத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்”, என்று தீபாவளி விருந்தினர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் முழங்கினார்.

மகாதிர் என்ன செய்தார், மஇகா கேள்வி

22 வருடங்கள் பிரதமராக இருந்த காலத்தில் மகாதிர் இந்தியர்கள் மீது அக்கறை காட்டியதே இல்லை என்று மஇகா கூறிவருவதைச் சுட்டிக் காட்டிய குலா, இது உண்மையல்ல என்றார்.

மகாதிர் இந்தியர்களுக்கு மஇகா மூலமாக அளித்த “இனிப்புகளை” குலா விவரித்தார்.

“1980களில் அவர் 10 மில்லியன் டெலிகோம் மலேசியா பங்குகளை மைக்கா ஹோல்டிங்ஸிற்கு கொடுத்தார் மற்றும் கெடாவில் எம்ஸ்ட் கட்டப்பட்டிருக்கும் நிலத்தை அவர் ஒதுக்கிக் கொடுத்தார்”, என்று குலா தெரிவித்தார்.

1990களில், அப்போது ஏழை இந்தியர்கள் என்று கூறப்பட்டவர்களிடமிருந்து ரிம100 மில்லியனை தொடக்க முதலீடாக திரட்டிய பின்னர் மைக்கா ஹோல்டிங்ஸ் நொடித்துப் போய்விட்டது.

எம்ஸ்ட் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது மஇகாவின் அன்றையத் தலைவர் ச. சாமிவேலுவின் சாதனை என்று கூறப்படுகிறது. குலா இவ்விரு திட்டங்களையும் இகழ்ந்துரைக்கவில்லை. மாறாக, இவ்விரு செயல்திட்டங்களும் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவரிடமிருந்து பெற்ற உதவிகளைச் சுட்டிக் காட்டினார்.

“மைக்காவிற்கு மகாதிர் கொடுத்த 10 மில்லியன் பங்குகளின் மதிப்பு ரிம100 மில்லியன், ஆனால் அது என்னவாயிற்று”, என்று அவர் வினவினார்.

“மகாதிரை நம்பாதீர்கள் என்று மஇகா கூறுகிறது. ஆனால் மஇகாவை நம்பாதீர்கள் மற்றும் நஜிப்பை நம்பாதீர்கள் என்று நான் கூறுகிறேன். என் கருத்துடன் ஒத்துப் போகிறாரா இல்லையா என்று வேதமூர்த்தியைக் கேளுங்கள்”, என்று குலா கூறினார்.