யூனிசெஃப் : மலேசியக் குழந்தைகளில் பெரும்பான்மையினர் பகடிவதைக்கு அஞ்சுகின்றனர்

மலேசியாவில் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும், கிட்டத்தட்ட 7 பேர் பகடிவதைக்கு அஞ்சுவதாக  உலகளாவிய, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இன்று, உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஜப்பானில், ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் 3 பேர் மட்டுமே அதைப்பற்றி அஞ்சுவதாகவும் ஐக்கிய நாடுகளில் ஒவ்வொரு 10 குழந்தைகளில் கிட்டத்தட்ட 4 பேர் உள்ளதாகவும் அத்தகவல் தெரிவித்துள்ளது. மலேசியாவில் உள்ள குழந்தைகளில் 64%, வன்முறை போன்ற மற்ற உலக பிரச்சினைகள் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர்.

மலேசியா, பிரேசில், எகிப்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட, 14 நாடுகளைச் சேர்ந்த 9 முதல் 18 வயது வரையிலான 11,000 சிறுவர் சிறுமியர் இதில் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் ‘மாற்றத்திற்காக குழந்தைகள்’ (Children4Change) அமைப்பு மேற்கொண்ட, குழந்தைகளின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கணிப்பின் கண்டுபிடிப்புகளை, யூனிசெஃப் உலகளாவிய ரீதியில் மறுபரிசீலனை செய்கின்றது.

‘உலகக் குழந்தைகள் தினம்’ உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், தொழிற்துறைகள் மற்றும் சமூகங்களுக்குக், குழந்தைகளின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கும்,  குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் உந்துதலாக இருக்கும் என யுனிசெஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பல்வேறு பின்னணியைச் சேர்ந்த, சுமார் 30 பிள்ளைகள் உலகச் சிறுவர் தினமான இன்று,  தங்கள் குரலை அனைவரும் கேட்க, பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளூர் ஊடகங்களில் வழிநடத்துவார்கள்.

1959 குழந்தைகள் உரிமைகள் பிரகடனம் மற்றும் 1989 குழந்தைகள் உரிமைகள் மாநாடு இரண்டையும் ஏற்று,  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 20, 1989-ஐ உலகக் குழந்தைகள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.