இந்தியர்களுக்கு மஇகா ஒன்றுமே செய்யவில்லை என்ற வேதாவை, தேவமணி சாடினார்

ஹிண்ட்ராப் தலைவர்  பொ.வேதமூர்த்தி, இந்தியச் சமூகத்திற்காக மஇகா  எதையும் செய்யவில்லை என்று கூறியதை அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி கடுமையாக சாடினார்.

ஃப்.எம்.தி.-இடம் பேசிய தேவமணி, வேதாவின் குற்றச்சாட்டை மறுத்தார்.

“எனக்கு அவரைப் பற்றி தெரியும். தேர்தல் நெருங்கி வரும்போது, மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற இது வழியல்ல.

“2007- ல், ஹிண்ட்ராப் நடத்திய பேரணி என் மனதைத் தொட்டது, நான் அவர்களை மதிக்கிறேன். ஹிண்ட்ராப் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

பாரிசான் நேஷனல் (பிஎன்) அதற்கான விலையை, ஏற்கனவே கொடுத்துவிட்டது, அப்பேரணிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில், பிஎன் பல நாற்காலிகளை இழந்தது,” என்று தேவமணி கூறினார்.

பிஎன் மற்றும் மஇகா, இந்தியர்களை மேம்படுத்த மனப்பூர்வமாக சிந்தித்து, பல செயல்திட்டங்களைச் செய்துவருகிறது என்றார் அவர்.

“வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை மற்றும் பல பிரச்சனைகளைக் கவனித்து, அவற்றின் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பதற்கு நாம் ஆவன செய்து வருகிறோம். 2008- ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்தியச் சமூகத்திற்கான அமைச்சரவைக் குழு பிரதமரால் இவ்வாறு அமைக்கப்பட்டது.

“பிரதமர் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் உட்பட, தொடர்ச்சியான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

“பிரதமரின் அலுவலகத்திற்குள்ளேயே இன்னும் பல முயற்சிகள் வடிவமைக்கப்பட்டன. அமைச்சர்கள், மஇகா மற்றும் அனைத்து பிஎன் அங்கத்துவக் கட்சிகளின் உதவியுடனும், மலேசிய இந்தியர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்ய, அங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

“இந்த ஆண்டு, இந்திய சமூகத்திற்காக, இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், மலேசிய இந்திய புளூபிரிண்ட்டை பிரதமர் அறிமுகம் செய்தார்,” என்று அவர் கூறினார்.

நாட்டில், இந்தியர்களின் கீழ்த்தரமான நிலைமைக்கு மஇகாவைக் குற்றம் சாட்டியதோடு, பிஎன்-க்கு “ஒரு பாடம் கற்றுக் கொடுக்கவேண்டும்” என்று கூறிய வேதாவின் கருத்துக்களுக்கு தேவமணி இவ்வாறு பதிலளித்தார்.

மஇகா இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதை முற்றிலும் அழிக்க, ஹிண்ட்ராப் பாடுபடும் என்றும் வேதமூர்த்தி கூறினார்.

ஹிண்ட்ராப்பின் ‘தேசிய முன்னணிக்குப் பூஜ்ஜியம் வாக்கு’  (ஷீரோ வோட் ஃபார் பிஎன்) பிரச்சாரத்தின் துவக்க விழாவில், கலந்து கொண்டு உரையாற்றியபோது, பி.என். ஆட்சியின் 50 ஆண்டுகளில், மஇகா இந்திய சமூகத்தை முற்றிலும் தோல்வியடைய செய்துவிட்டது என்று வேதா கூறினார்.

ஒரு வருடம் பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருந்த வேதாவுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும்.

இந்திய சமூகத்திற்குப் பல விஷயங்களைச் செய்ய தற்போதைய அரசு முயன்று வருகிறது.

“நாம் என்ன செய்கிறோம் என்பதை வந்து பாருங்கள். இந்திய சமூகத்தின் நலனுக்காக, ஒன்றாக வளர உதவுங்கள்.

“நீங்கள் கோபமாக இருந்து, எங்களை நசுக்குவதற்காக போராட வேண்டாம். ஒரு கோபமான நபர்  நீண்ட தூரம் செல்ல முடியாது, “என்றும் தேவமணி கூறினார்.