சூ கீ-இன் விருதை, ஆக்ஸ்போர்டு மீட்டுக்கொண்டது

இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு நகரசபை, மியன்மார் ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய ‘நகரத்தின் சுதந்திரம்’ (ஃப்ரிடம் ஓஃப் சிட்டி) விருதை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தது.

மியான்மார் இராணுவத் தலைவர், அந்நாட்டில் மத பாகுபாடு ஏதும் இல்லை என்று கூறிய அதே நாளில், வாக்கெடுப்பு நடந்ததாக ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“ஒரு பன்முக மற்றும் மனிதநேய நகரம் என ஆக்ஸ்போர்ட்டுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. கண்மூடித்தனமாக வன்முறையில் ஈடுபடும் சிலரால் நம் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது.

“ரொஹிங்யா சமூகத்திற்கான மனித உரிமைகள் மற்றும் நீதி கோரிக்கை குரல்களுடன் இன்று நாமும் சேர்ந்துள்ளோம்,” என இந்த விஷயத்தைச் சபையில் முன்வைத்த கவுன்சிலர் மேரி கிளார்க்சன் கூறினார்.

சுமார் 600,000 ரோஹிங்யா முஸ்லிம்கள், மேற்கு மியான்மரில் உள்ள ராக்கின் பகுதியிலிருந்து, இராணுவ நடவடிக்கைகளால் அண்டை நாடான வங்காள தேசத்திற்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, இதனை ஓர் இனப்படுகொலை என்று சித்தரித்துள்ளது.