புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களின் தேரர்கள், த.தே.கூ.வுக்கு இடையில் பேச்சு!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களுக்குமிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபை விரைவில் தயாரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்பு இப்போதைக்கு தேவையில்லை என பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்கள் கருத்துத் தெரிவித்திருந்திருந்தனர். எனினும், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், மூவின மக்களும் சுதந்திரமாக வாழவும் புதிய அரசியலமைப்பு மிகவும் அவசியம் எனச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியதையடுத்து, பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்கள் இணக்கம் வெளியிட்டனர்.

இது தொடர்பில் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேசுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பந்தனின் காலத்தில் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்கள் மனம் திறந்து பேசினர்.

அதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தாமல் இறுதி வரைபையே முன்வைத்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இடைக்கால அறிக்கையை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விமர்சிப்பதால் சிங்கள பௌத்த மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபை விரைந்து தயாரிக்குமாறு பிரதமர் மற்றும் கூட்டமைப்பு ஆகியோரிடம் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபை விரைந்து தயாரிப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

-சுடர்ஒளி

TAGS: