இந்தியர்கள் இன்னும் தோட்டங்களில் இல்லை, நஜிப் கூறுகிறார்

தோட்டப்புறச் சமூகமாக இருந்து, இன்று நவீன சமூகமாக மாறிவரும் இந்தியர்களுக்கு, முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் நஜிப் ரஷாக் தெரிவித்தார்.

இத்தகைய தனிப்பட்ட சவால்கள், குறிப்பாக இந்திய சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவ, அரசாங்கத்தின் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

“இந்திய சமுதாயத்தில் சில தனிப்பட்ட சவால்கள் இருப்பதால் நான் அதில் கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக, இந்திய சமுதாய கட்டமைப்பு சவால் மிக்கது.

“தோட்டப் புறங்களில் இருந்து, நவீன சமூகமாக மாற்றம் பெற, புதிய தலைமுறையினருக்கு அதிக அளவில் உதவிகள் தேவைப்படுகிறது,” என்று இன்று, மக்கள் சக்தி 9-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் திறந்து வைத்து பேசியபோது நஜிப் கூறினார்.

இதனை அடைய, இந்திய சமூகத்திற்கு உதவ பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவர் ஒரு சிறப்புத் திட்டத்தை முன்வைத்தார்.

“மலேசிய வரலாற்றில், நாடாளுமன்றத்தின் ஹான்சர்ட் பதிவில், இந்தியர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டம், இதுவரை பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டதில்லை,” என்று நஜிப் கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம், இந்திய சமூக அபிவிருத்தி செயல் திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது. அடிப்படைத் தேவைகள், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 10-ஆண்டு நடவடிக்கைத் திட்டத்தை உள்ளடங்கிய அது, பிரதமர் இலாகாவின் சிறப்பு பிரிவுகளால் செயல்படுத்தப்படும்.

எனவே, பிஎன்-க்கு ஆதரவு கொடுக்க வேண்டும், ஏனெனில் இந்தக் கூட்டணி மட்டுமே தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்று நஜிப் கூறினார்.

“நாம் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது. தமிழ் மொழியில் வெற்று வாக்குறுதி ‘வெட்டிப் பேச்சு’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மை என்றால், ‘நிஜம்‘ என்று சொல்லப்படுகிறது.

“அரசாங்கம் என்ற முறையில், பி.என். தொடர்ந்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்,” என்றார் நஜிப்.