பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?

25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வலதுசாரி இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் இங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, இந்து தேசியவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பிபிசியின் முன்னாள் இந்திய செய்தியாளர் மார்க் டல்லி விவரிக்கிறார்.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, வட இந்தியாவின் அயோத்தியில் ராமரின் பிறப்பிடம் என நம்பப்படும் இடத்தில் நின்றிருந்த பாபர் மசூதியை கலவரக் கோலம் பூண்ட இந்து தேசியவாதிகள், இடிப்பதை நான் பார்த்தேன்.

பாபர் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டவேண்டும் என ஆறு வருடங்களாக பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் பிரசாரம் நடந்தது.

15,000 பேர் கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியில் கூடியது. திடீரென முன்நோக்கி நகர்ந்த அவர்கள், மசூதியைப் பாதுகாத்து நின்ற போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மசூதி கட்டடத்தை சூழ்ந்து உடைக்க ஆரம்பித்தனர்.

போலீஸ் அரண் உடைவதைப் பார்த்தேன். கற்கள் மழை போல பொழிந்ததால், போலீஸார் தங்களது தலைகளைக் காத்துக்கொள்ள கவசத் தட்டிகளை தலைக்குமேல் பிடித்தனர்.

முதலில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக சக போலீஸ்காரர்களை ஒரு போலீஸ் அதிகாரி தள்ளிச் செல்வதைப் பார்த்தேன். ஒரு வரலாற்று நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்து தேசியவாதத்தின் மிக முக்கியமான வெற்றியாகவும், மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் இந்த நிகழ்வு இருந்தது.

”இது நவீன இந்தியாவின் அப்பட்டமான சட்டமீறல்” என இதனை அரசியல் ஆய்வாளர் சோயா ஹசன் வர்ணிக்கிறார்.

மசூதி இடிக்கப்பட்ட அன்று மாலை இங்கு நிலைமை மோசமாக இருந்ததாக, உத்தரபிரதேசத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ராம் தத் திரிபாதி கூறுகிறார்.

மசூதியை இடித்ததன் மூலம் இந்து தேசியவாதிகள் ,”பொன் முட்டை இட்ட கோழியை கொன்றனர்” என்கிறார் அவர். ராமரின் பிறப்பிடம் என அவர்கள் நம்பும் இடத்தில் மசூதி இருந்தது அவர்களுக்கு உணர்ப்பூர்வமான பிரச்சனை. அங்கு கோயில் கட்டவேண்டும் என்பது அவர்களின் விருப்பம் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

முதலில், ராம் தத் அதை தவறாக புரிந்துகொண்டதாகத் தெரிந்தது. இந்தியாவின் பல இடங்களில் நடந்த இந்து முஸ்லில் கலவரங்களில் ரத்தம் சிந்தப்பட்டது. மோசமான கலவரம் மும்பையில் நடந்தது, அங்கு 900 பேர் கொல்லப்பட்டனர். இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக போலீஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கலவரங்கள் தணிந்தது. அயோத்தியாவில் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்ற பிரசாரத்தின் வேகம் குறைந்தது.

பாபர் மசூதியை தகர்த்தது இந்துக்களின் ஓட்டை தனக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் என பா.ஜ.க எதிர்பார்த்தது. ஆனால், 1993-ல் மூன்று மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க.வால் ஆட்சியை அமைக்கமுடியவில்லை. அதில் ஒரு மாநிலம் தான் உத்தரபிரதேசம்.

தொன்னூறுகளின் பிற்பகுதியில் நடந்த 3 பொதுத் தேர்தலில் பா.ஜ.க படிப்படியாக வளர்ந்தது. 1999-ல் அக்கட்சியினால் நிலையான கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. ஆனால், முதல் முறையாக மத்தியில் பா.ஜ.க அதிகாரத்தைக் கைப்பற்றியது, அதின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் கொந்தளிப்பை உண்டாக்கியது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அவரின் மறைவு, காங்கிரசை நிலை நிறுத்திவந்த நேரு-காந்தி வம்சத்தில் இருந்து எந்த தலைவரும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத நிலைமையை உருவாக்கியது.

அந்தக் குடும்பத்தில் இருந்து தலைமைக்கு வருவதற்கு சாத்தியமாக இருந்த ஒரே நபரான இத்தாலியில் பிறந்த ராஜீவின் மனைவி சோனியா இருந்தார். ஆனால், அரசியலில் ஈடுபட அவரும் மறுத்தார்.

1991-ல் அமைந்த சிறுபான்மை அரசாங்கத்தை நரசிம்மராவ் தலைமை தாங்கினார். பாபர் மசூதியை பாதுகாக்க அவர் தவறியது, அவர் மதச்சார்பற்ற காங்கிரஸ்காரராக இல்லாமல், இந்து தேசியவாதியாக இருப்பதாக அவரது எதிரிகளால் குற்றம்சாட்ட பயன்பட்டது. 1996 பொது தேர்தலில் போட்டியிட்டபோது காங்கிரஸ் கட்சி பிரிந்தும் ஒழுக்கற்ற நிலையிலும் இருந்தது.

ஆனால், 1999-ல் மத்தியில் நிலையான கூட்டணி ஆட்சியை பா.ஜ.க அமைத்தது. அக்கட்சியை சேர்ந்த பிரதமர் வாஜ்பாயும், இரண்டாம் இடத்தில் இருந்த அத்வானியும் அயோத்தியா பிரச்சனை அதிகளவு ஓட்டுகளைப் பெற்றுத்தந்தது என்றோ, கட்சியின் திட்டமான இந்துத்துவாவை செயல்படுத்த முடியும் என்றோ நம்பவில்லை.

தற்போது அட்சி அமைத்துள்ள கூட்டணி நிலையாக இருக்க வேண்டுமென்றால், அடுத்த தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்றால் பா.ஜ.க ஒரு வலதுசாரி கட்சியாக இல்லாமல், மையவாத கட்சியாக இருக்கவேண்டும் என அவர்கள் நம்பினர்.

”இந்து மதம் பல்வகைத் தன்மையுள்ளது. மதத்தின் பெயரால் உண்மையில் இந்துக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்த முடியாது” என அத்வானி ஒருமுறை என்னிடம் கூறினார்.

கூட்டணி கட்சிகளை தவறாகத் தேர்வு செய்ததும், தனது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி பலப்படுத்தியதுமே பா.ஜ.கவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. சோனியா காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி 10 வருடங்கள் ஆட்சி செய்தது.

அயோத்தியா சம்பவம் முக்கியமானதாக இருந்தாலும், இது இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவில்லை. 2014-ல் பா.ஜ.க பெற்ற வெற்றி திருப்புமுனையைத் தந்தது. இத் தேர்தலில் பாஜக மத்தியில் அருதிப் பெரும்பான்மை பெற்றது.

இந்து தேசியவாதத்தை தீவிரமாக ஊக்குவிக்கத் தயங்காத பிரதமர் மோதி, பா.ஜ.கவின் இந்துத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்த மோதி அரசு, இந்தியை ஊக்குவித்து வருகிறது. அத்துடன் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நியமித்து வருகிறது.

அனைத்து இந்தியர்களுக்காகவும் இந்தியாவை வளர்ச்சியடைய வைப்பதே தனது நோக்கம் என மோதி கூறினாலும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க அரசுகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் வெகுசிலரே.

இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதல்வராக மோடி தேர்ந்தெடுத்தவர் முஸ்லிம் விரோதப் பாங்கு உடையவர்.

ஆனால், இந்து ஓட்டுக்களை பிரதானமாக கொண்டு மட்டுமே மோதி வெல்லவில்லை. இந்தியாவை வளர்ச்சியடைய வைப்பதாக, மாற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படியிலே அவர் வென்றார்.

கங்கிரஸ் கட்சி மீண்டும் குழப்பமான நிலைக்குச் சென்றுவிட்டதும் மோதியின் பிரசார வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. விவசாயிகளின் ஓட்டில் பாதிப்பதை ஏற்படுத்தும் என்பதால், மாட்டிறைச்சிக்கான தடையை மோதி தளர்த்துவார் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிகிறது.

இந்து மதம் மிகவும் மாறுபட்ட மதமாகவே உள்ளது. இந்தியா ஒரு பண்டைய, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு.

எனவே, மதச்சார்பற்ற இந்தியா முடிவுக்கு வந்து, இந்து தேசியம் உருவாகும் ஒரு திருப்புமுனையை மோடி அடைவாரா என்பதிலோ, அடைய விரும்புவாரா என்பதிலோ என் மனதில் இன்னும் தெளிவு இல்லை.

-BBC_Tamil