ஜைட்: டிவிட்டரில் பதிவிட்ட கருத்துகள் என்னுடையவை மட்டுமே என்பதை போலீசுக்குத் தெரிவித்தேன்

முன்னாள்  சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்,  சிலாங்கூர்   அட்சியாளர்    சுல்தான்    ஷராபுடின்   இட்ரிஸ்  ஷாவின்  கருத்துகள்   தொடர்பில்   தாம்   டிவிட்டரில்  பதிவு   செய்திருந்தது    குறித்து   போலீஸ்   இன்று  தம்மிடம்    விசாரணை   செய்ததாகக்  கூறினார்.

டிவிட்டரில்  தெரிவித்திருந்தவை   தம்முடைய   சொந்த  கருத்துகள்  என்றும்   அவை   வேறு   எந்தவொரு  தரப்பின்  கருத்துகளோ   எதிரணியின்   கருத்துகளோ   அல்ல    என்றும்  போலீசிடம்   விளக்கியதாக    அவர்   சொன்னார்.

“அரசமைப்புப்படியான  முடியாட்சியின்  பங்களிப்பு    குறித்தும்  ஜனநாயக   முறையை   நாம்  எவ்வாறு   நிலைநிறுத்தி   வரவேண்டும்   என்பதையும்   எடுத்துரைப்பது  என்  கடமை  என்பதை  உணர்ந்து   அவ்வாறு   செய்ததாக  போலீசில்   விளக்கினேன்”.   ஒரு  மணி  நேரம்  போலீசாரால்   விசாரணை   செய்யப்பட்ட   ஜைட்,  விசாரணைக்குப்  பின்னர்   புக்கிட்   அமான்   போலீஸ்   தலைமையகத்துக்கு   வெளியில்     செய்தியாளர்களிடம்   பேசினார்.

தேவைப்பட்டால்  திரும்ப   அழைக்கப்படலாம்   என்று   தம்மிடம்   தெரிவிக்கப்பட்டதாகவும்   அவர்   சொன்னார்.

“அது   வழக்கமான  ஒன்றுதான். போலீஸ்  எந்த   நேரத்திலும்   ஒருவரை   விசாரணைக்கு   அழைக்க   முடியும். நான்  விடுமுறைக்காக    எங்கும்  போகப்போவதில்லை   என்பதால்   எப்போது   வேண்டுமானாலும்  வர  முடியும்  என்று  கூறிவிட்டேன்”,  என்றாரவர்.