மஇகா செனட்டர் நியமன தள்ளிவைப்பும் பொதுத்தேர்தலும்!

விடுதலை அடைந்த நாள் முதல் நாட்டின் அதிரகாரக் கட்டிலை அயராமல் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி, தன் சிம்மாசனத்திற்கு ஏன் மணி விழாவைக் கொண்டாடவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டு பிறந்ததுமே அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலைப் பற்றிய பயம் தொற்றிக் கொண்டதோ என்னவோ? யார் கண்டது?

நடப்பு நிலவரங்களை உற்று நோக்கும்பொழுது, தேசிய முன்னணிக் கூடாரம் கலவரம் நிறைந்துதான் காணப்படுகிறது.  இந்த அரசியல் கூட்டணியின் தலைமைக் கட்சிகளின் தலைவர்கள் அண்மைக்காலமாக எதிலும் இருப்பு கொள்ளாமல் பரிதவிக்கும் தன்மையை வைத்து அரசியல் அவதானியரும் அதைத்தான் உறுதி செய்கின்றனர்.

நிம்மதியாக உறங்கி எழுவதில்லை; நாற்காலியில் அமரும்போதுகூட விளிம்பில்தான் உட்காருகின்றனர். அந்த அளவுக்கு அடுத்த ஆண்டில் தொடக்கத்தில் எப்படியும் நடந்தே ஆக வேண்டிய பொதுத் தேர்தல் குறித்த பதற்றமும் மிரட்சியும் அவர்களை ஆட்கொண்டுள்ளன.

அந்த வகையில், ம.இ.கா. மட்டும் இதற்கு விலக்காக முடியுமா என்ன? ஆகக் கடைசியாக ம.இ.கா. தலைமை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பகாங் ஆகிய மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பகாங், பினாங்கு, சபா ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தேர்வு பெற்றாலே பெருங்கொடுப்பினை என்ற அளவிற்கு வந்துவிட்டதுதான் அந்த முடிவு.

அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஒரு தொகுதிகூட பச்சை நிறம் காட்டவில்லையாம். நாட்டின் தென் கோடி முனையில் அந்தக் கட்சியின் தலைமை களம் கண்டுவரும் தொகுதியிலும் வெள்ளி மாநிலத்தில் ஒரு தொகுதியும் மஞ்சள் நிறம் காட்டுகிறதாம். தவிர, இன்னொரு மலைப்பாங்கான தொகுதியில் சிவப்பும் மஞ்சளும் மாறி மாறி பளிச்சிடுகின்றதாம். மற்ற தொகுதிகளில் சிவப்பு நிறம்தான் பிரகாசமா எரிகிறதாம். மொத்தத்தில் பச்சை வண்ணம் மட்டும் ம.இ.கா. இலக்கு வைத்துள்ள ஒரு தொகுதியில்கூட தென்படவில்லையாம்.

இதனால் மிரண்டுபோன ம.இ.கா. தலைமை, நாடாளுமன்ற மேலவைக்கு நியமனம் செய்ய வேண்டிய மூன்று இடத்திற்கும் அப்படியே மூடி போட்டு, இறுக மூடி தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு, அதையும் அடிக்கடி தடவிப் பார்த்துக் கொள்கின்றதாம்.

அந்தக் கட்சியின் உதவித் தலைமைகளில் ஒன்றுக்கு அவரசப்பட்டு இடம் தந்து விட்டோமே என்று கவலையில் ஆழ்ந்துள்ள ம.இ.கா. தலைமை, பரவாயில்லை; போனது போகட்டும்; ஆனது ஆகட்டும்; உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்துக் கொள்வோம். ஒருவேளை தாம் தோற்றுவிட்டால், சட்டைப் பையில் இருக்கிற  மூன்று செனட்டர் பதவிகளில் ஒன்றை நம் வசப்படுத்திக் கொண்டு, மீத இரண்டையும் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாகம் பிரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டதாம்.

இதனால், ஒருவகையில் இளைப்பாறும் மனநிலைக்கு வந்துவிட்ட ம.இ.கா. தலைமை, செனட்டர் பதவியை எதிர்பார்த்து மாணிக்கவாசகக் கட்டடத்தின் திசை நோக்கி காத்திருக்கிற கிளிகளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பை சிந்துகிறதாம்.

இந்தக் கட்சியின் முன்னாள் தலைமையின் வாரிசு கட்சியின் கல்லாப்பெட்டிச் சாவியை வைத்திருந்தாலும், மக்களைச் சந்திக்கவும் தேர்தலை எதிர்கொள்ளவும் தொடை நடுங்குகிறாதாம். அதனுடைய இலட்சணம் அப்படி; நாம் என்ன செய்வது; அதனால், அலுங்காமல் குலுங்காமல்  நியமனப் பொறுப்பில் அமரத்தான் ஆவல் கொண்டுள்ளதாம். அதைப்போல, அந்தக் கட்சியின் வனித நாயகியும் மோகனப் புன்னகைத் தவழ தேசியத் தலைமையைச் சுற்றிசுற்றி வலம் வருகிறதாம்.

பெயர்க் காரணம் ஒன்றினால் மட்டுமே அதிர்ஷ்ட மங்கை மாலை சூட, நாட்டின் தென்கோடிப் பகுதியின் ஒரு தொகுதியில் வான்குடை வேட்பாளராகக் களம் இறங்கி, படை வென்று அதிர்ஷ்டக்கார அரசியல்காரராகத் திகழும் இன்றையத் தலைமை, தற்பொழுது அரசியல் அதிரடியிலும் சாணக்கியத்திலும் ஏகமாகத் தேர்ந்துவிட்டதை நாமும் கண்டுதான் வருகிறோம். இன்றைய நாட்களில் செனட்டர் பதவியை குறிவைத்து தன்னைச் சுற்றி வருபவர்களைப் பார்த்து இந்தத் தலைமை இடப்பக்கமாக சிந்தும் இளநகையைக் கண்டு அது புன்னகை என்று நம்பிக் கொண்டிருகின்றனவாம் இந்த இலவு மரக் கிளிகள்.

இது புன்னனகையோ மென்னகையோ அல்ல; மாறாக வன்னகை என்பதை 14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் இந்தக் கிளிகள் அறிந்து, இலவு காத்தக் கிளிகளாக ஆகும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

மொத்தத்தில் ம.இ.கா. தலைமைக்கு அமைச்சரவையில் இடம் உறுதி (தேசிய முன்னணி வென்றால்) என்ற நிலை செய்யப்பட்டுவிட்டது. மலேசிய நாடாளுமன்ற மேலவையில் ம.இ.கா.-விற்கான மூன்று இடங்களும் காலியாக வைக்கப்பட்டுள்ளதன் பின்னணி இதுதான். அடுத்தடுத்து நடக்க இருப்பதையும் பார்க்கத்தானேப் போகிறோம்.!

-வெண்கதிரன்