பெரு பஸ் விபத்தில் 48 பேர் பலி

பெருவின் கடற்கரையோர மலையுச்சியிலிருந்து பஸ்ஸொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர். ட்ரக் ஒன்றுடன் மோதிய பின்னரே, பஸ் கீழே விழுந்து, விபத்துக்குள்ளானது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தலைநகரிலிருந்து 130 கிலோமீற்றர்கள் வடக்காக உள்ள ஹுவாச்சோ என்ற இடத்திலிருந்து, தலைநகருக்கு, 55 பயணிகளுடனும் 2 பணியாளர்களுடனும், அந்த பஸ் பயணித்துள்ளது.

100 மீற்றர்கள் உயரமான மலையுச்சியிலிருந்து கீழே விழுந்த பஸ், கடலின் ஓரத்தில் காணப்பட்ட கற்பாறைகளின் மீது, தலைகீழாக விழுந்தது என அறிவிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, காயமடைந்த 6 பேர், இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். எனினும், ஏனைய 3 பேர் தொடர்பில் எவ்விதமான தகவலும் இல்லை என, உள்துறை அமைச்சுத் தெரிவித்தது.

“பேய் வளைவு” என அழைக்கப்படும் வீதியின் பகுதி, ஆபத்தான ஒன்றாகக் கருதப்படும் நிலையில், அவ்விடத்திலேயே விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில், அடிக்கடி பனிப்புகை ஏற்படுவதோடு, அதிக ஈரப்பதன் காரணமாக, வீதி வழுக்கும் இயல்புடையதாக மாறுகிறது என்றும் கூறப்படுகிறது.

-tamilmirror.lk