ஹரபான் பிஎம் வேட்பாளராக மகாதிர் நியமிக்கப்பட்டதில் பிஎன் தலைவர்களுக்கு ‘பரம திருப்தி’

பக்கத்தான்  ஹரபான்  அதன்  பிரதமர்   வேட்பாளராக   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை  நியமித்தது   அதற்கு   எதிராக  வேலை  செய்யப்போகிறது  என்று  பிஎன்  தலைவர்கள்  கருதுகிறார்கள்.

பிகேஆர்  நடப்பில்     தலைவர்   அன்வார்   இப்ராகிமும்   மகாதிரை  ஹரபானின்  பிஎம்  வேட்பாளராக  ஏற்றுக்கொண்டது  எதிரணி   நம்பத்தக்கதல்ல    என்பதற்கு   நல்ல  எடுத்துக்காட்டு   என  மசீச   விளம்பரப்  பிரிவுப்   பேச்சாளர்   டி  லியான்  கெர்   கூறினார்.

ஒரு  காலத்தில்   இருவரும்    எலியும்  பூனையுமாக       அடித்துக்கொண்டவர்கள். இப்போது  ஆட்சியைப்  பிடிப்பதற்காக  பகையை  மறந்து   கைகோத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

“அதுதான்  வருங்கால   தலைமுறையினருக்குச்  சொல்லிக்கொள்ள  விரும்புகிறோம்  நம்  தலைவர்களை   நம்பாதீர்கள்   என்று”,  என   டி  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

மகாதிரை  பிஎம்  வேட்பாளராக   நியமித்ததே    ஹரபானுக்கு   மாற்றங்களைக்  கொண்டுவருவதில்   உண்மையான   அக்கறை  இல்லை   என்பதைக்  காட்டுவதாக   அவர்   சொன்னார்.

ஹரபான்  நேற்று    அதன்   தேசிய  மாநாட்டில்    மகாதிரை   அதன்  பிரதமர்   வேட்பாளராக    அறிவித்தது.

மகாதிரை   வேட்பாளராக  நியமிக்க   டிஏபி  ஒப்புக்கொண்டது   அக்கட்சி   அதன்  கொள்கைகளை   விட்டுக்கொடுத்திருப்பதைக்   காட்டுவதாக   மைபிபிபி   முன்னாள்   தகவல்   தலைவர்   ஏ.சந்திரகுமணன்   கூறினார்.

“22  ஆண்டுகளாக  டிஏபியும்  மற்ற   எதிர்க்கட்சிகளும்  மகாதிர்   தலைமையைக்  கடுமையாக    சாடியும்,  கேலி   செய்தும்   வந்துள்ளனர். அவர்  ஊழல்வாதி,  அதிகாரமீறலில்  ஈடுபட்டவர்   என்றெல்லாம்   குற்றம்  சாட்டி  வந்துள்ளனர்.

“(முன்னாள்  டிஏபி   தலைவர் )  கர்ப்பால்   சிங்கூட  எதிரணி   ஆட்சிக்கு   வந்தால்  அது  கூண்டில்  நிறுத்தப்போகும்  முதல்   நபர்   மகாதிராகத்தான்  இருப்பார்  என்று  கூறினார்”,  என்றாரவர்.

நஜிப்   அப்துல்  ரசாக்   அம்னோவிலிருந்து   வெளியேற்றப்பட்டால்   அவரையும்கூட   எதிரணி  கூட்டணி    அதன்   பிரதமர்  வேட்பாளராக   நியமிக்கும்.     ஆச்சரியப்படுவதற்கில்லை   என சந்திரகுமணன்   கூறினார்.

ஹரபான்  சீரமைக்கப்போவதாக   வாக்குறுதி    அளித்துள்ளது    ஆனால்,  மகாதிர்தான்   அதன்  சீரமைப்புப்  பணிகளுக்குத்   தடங்கலாக   இருக்கப்  போகிறார்    என  பிஎன் வியூக   தொடர்புக்குழு   இயக்குனர்    அப்துல்   ரஹ்மான்  டஹ்லான்    கூறினார்.

ஹரபான்   மகாதிரை   அடுத்த   பிரதமராக   பெயர்  குறிப்பிட்டு   அவர்   சீரமைப்புகளைச்   செய்வார்   என்று   எதிர்பார்ப்பது     ஒரு  தவறான   முடிவு.  எள்ளி  நகையாட  வைக்கும்  முடிவு.

“மகாதிர்  அச்சீரமைப்புக்களைச்   செய்யப்போவதில்லை. அவர்  வஞ்சனை  மிக்கவர்,  உதவாக்கரை   சீர்திருத்தவாதி.

“அம்முடிவு   அவர்களுக்கே  கேடாய்  அமையும்.    யாரை  மலேசியாவின்  ஊழல்மிக்கவர்   என்று  கூறி  வந்தார்களோ   அவரையே   ஹரபான்    தேர்ந்தெடுத்திருக்கிறது.  வெட்கக்கேடு”, என  அப்துல்  ரஹ்மான்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.