வேள்பாரி : வேறுவழி இல்லாததால்தான், ஹராப்பான் மகாதீரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்

ஜிஇ14-ல் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், பக்காத்தான் ஹராப்பானைத் தலைமை தாங்கி வழிநடத்த மூத்த, வயதான அரசியல்வாதியான டாக்டர் மகாதிர் முகமட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று மஇகா பொருளாளர் சா.வேள்பாரி கேலி செய்துள்ளார்.

“பக்காத்தான் ஹராப்பான் வேறு எந்தத் தலைவரையும் தேர்ந்தெடுக்காமல், 93 வயதான ஒருவரை அவர்களது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதை எண்ணி நான் வியந்து கொண்டிருக்கிறேன்,” என்று அவர் இன்று பெரித்தா டெய்லியிடம் தெரிவித்துள்ளார்.

“இதில் இன்னொரு அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால், லிம் கிட் சியாங் போன்ற மூத்த அரசியல்வாதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நாட்டின் தற்போதைய மோசமான நிலை மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியில்தா தொடங்கியது என்று கிட் சியாங் கூறியிருந்தார்,” என்று வேள்பாரி சொன்னார்.

‘மிகவும் நெருக்குதலான’ ஒரு நிலையிலேயே, மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக ஹராப்பான் அறிவித்திருக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

பிகேஆரின் அனைத்து ஆதரவாளர்களையும், குறிப்பாக 1998-ல், அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கி போராடிய அனைவரையும் நினைத்து தான் அனுதாபப்படுவதாகவும் அவர் சொன்னார்.

“அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர், மேலும் இசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது, அன்வரை விடுதலை செய்ய நடந்த அவர்களது போராட்டங்கள் அனைத்தும் நேர விரயமானது என்று தோன்றுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலில், ஹராப்பான் வெற்றிபெற்றால், உலகின் மிக வயதானப் பிரதமரைக் கொண்ட நாடு மலேசியா என்ற சாதனையை நம் நாடு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இது உலக சாதனை. மகாதிரின் சிறந்த நண்பரான, 93 வயது ராபர்ட் முகாபே, அண்மையில்தான் ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஹராப்பானின் இளம் தலைவர்களுக்கு வேள்பாரி ஓர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

“உறுதியாக இருங்கள், எனக்குத் தெரிந்து மகாதீரின் மீது கொண்ட கருத்து வேறுபாட்டினாலேயே நீங்கள் எதிர்க்கட்சியில் இணைந்தீர்கள், குறிப்பாக மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பின்னர். இப்போது, அவர் உங்கள் தலைவர். வாழ்க்கை நிச்சயமாக சில சமயங்களில் கொடூரமானது,” என்று அவர் கூறியுள்ளார்.