இனவாதமற்ற மலேசியா என்ற அடிப்படையில் போராட்டம் இருக்க வேண்டும், முஜாஹிட்

 

பக்கத்தான் ஹரப்பானில் பெர்சத்து இருப்பது தமது கட்சி அமனா, டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அவற்றுக்கு ஒரு புதிய உண்மைநிலையை உணர்த்தியுள்ளது, அதாவது அம்னோ பாணியிலான மலாய் மனப்பாங்குடன் செயல்பட வேண்டியதும் அதில் அடங்கும் என்பதை அமனாவின் உதவித் தலைவர் முஜாஹிட் யுசோப் ராவா ஒப்புக்கொள்கிறார்.

இருக்கைகளை பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பெர்சத்துவிலிருக்கும் அம்னோ மனப்பாங்குடைய மலாய்க்காரர்களிடம் ஹரப்பானின் சீர்திருத்தத் திட்டங்கள் பற்றி சமரசம் செய்துகொள்ள வேண்டியிருப்பதை முஜாஹிட் தெரிந்து கொண்டார்.

அதிகமான முற்போக்கு சிந்தனையுடைய மலாய்க்காரர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நமது (அமனா, டிஎபி மற்றும் பிகேஆர்) முயற்சி இருக்கைகள் ஒதுக்கீட்டில் பின்னடைவு கண்டது. அது பெர்சத்து அம்னோவுக்கு எதிராகவும் மற்றவர்கள் அனைத்து பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்கு எதிராகவும் என்ற அடிப்படையில் அமைந்தது என்று முஜாஹிட் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நடைமுறையைப் பொறுத்தவரையில், சீர்திருத்த இயக்கத்திற்கு இது ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தாது என்று கூறிய முஜாஹிட், பெர்சத்துவின் அரசியல் போராட்டம் இனவாதமற்ற மலேசியா என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

பெர்சத்து அம்னோ பாணியிலான மலாய் மனப்பாங்ககை அகற்றி அது முற்போக்கான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக மாற வேண்டும் என்று பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினரான முஜாஹிட் மேலும் கூறினார்.

மலேசியாவுக்கு புதியதோர் அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் நமது முயற்சியில் பெர்சத்துவுக்கு இதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். அம்னோவுக்கு எதிராக மிக அதிகமான இருக்கைகளைப் பெறுவது மட்டும் அன்வார் இப்ராகிமும் சீர்திருத்த இயக்கமும் போராடி வரும் புதிய மலேசியாவுக்கு உதவாது என்று முஜாஹிட் கூறுகிறார்.

அம்னோவை அகற்றிவிட்டு அதன் இடத்தில் அம்னோவின் இனவாத போதனையை வைத்துக் கொண்டு, மலாய் சமூகத்திற்கு கட்டாயத் தேவையான சீர்திருத்தம் இல்லாமல் இருப்பது பொருளற்றதாகும் என்கிறார் முஜாஹிட்.

“மலாய்க்காரர்கள் அவர்களது சிக்கிக்கொண்ட மனநிலையிருந்து விடுபட்டு ஆற்றல்மிக்க போட்டியை அணைத்துக்கொள்வதோடு இனவாதமற்ற ஒரு மலேசியா மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்”, என்று முஜாஹிட் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற ஹரப்பான் மாநாட்டில் பெர்சத்து அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிகமான இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ள அறிவிப்பை முஜாஹிட் குறிப்பிட்டார்.

மேற்கு மலேசியாவுக்கான 165 நாடாளுமன்ற இருக்கைகளில், பெர்சத்து 52, அடுத்து பிகேஆர் 51, டிஎபி 35 மற்றும் அமனா 27 இருக்கைகளைப் பெற்றுள்ளன.