மாநில ஹரபான் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆர் கையெழுத்திடவில்லை

பக்கத்தான்    ஹரபான்    இரண்டாவது   தேசிய   மாநாட்டின்  பிரகடனத்தை   ஏற்றுக்கொள்ளும்  கூட்டறிக்கையில்  சிலாங்கூர்  பிகேஆரின்  பெயரைக்  காணவில்லை.

நேற்று   வெளியிடப்பட்ட    மாநில   அளவிலான   கூட்டறிக்கையில்  சிலாங்கூர்   அமனா   தலைவர்   இஸாம்  ஹஷிம்,  சிலாங்கூர்   டிஏபி   தலைவர்  டோனி  புவா,  சிலாங்கூர்   பெர்சத்து    தலைவர்   அப்துல்  ரஷிட்  அசாரி   ஆகிய  மூவர்  மட்டுமே   கையொப்பமிட்டிருந்தனர்.

“அமனா,  டிஏபி,  பெர்சத்து   ஆகியவற்றின்  சார்பில்   மாநாட்டுப்  பிரகடனங்களுக்கு   எங்களின்  தளர்வற்ற   ஆதரவைத்   தெரிவித்துக்  கொள்கிறோம்”,  என்று   அவ்வறிக்கை   கூறிற்று.

ஹரபான்  தேசிய  மாநாட்டுப்  பிரகடனம்   மற்றவற்றோடு  பெர்சத்து   அவைத்தலைவர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்   பிரதமர்   வேட்பாளராகவும்   பிகேஆர்   தலைவர்   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலைத்  துணைப்  பிரதமர்   வேட்பாளராகவும்   அறிவித்திருந்தது.

அத்துடன்  14வது   பொதுத்   தேர்தலுக்கான  பக்கத்தானின்  இடப்  பங்கீடு  குறித்தும்   அது  அறிவித்தது.   எட்டாவது   பிரதமர்   சிறையிலுள்ள   முன்னாள்   எதிரணித்   தலைவர்   அன்வார்  இப்ராகிம்   என்பதையும்   அது  குறிப்பிட்டது.

மாநாட்டுப்  பிரகடனத்தை  அன்வாரும்  ஏற்றுக்கொண்டார்.     தாமும்  பிகேஆரும்   ஏற்றுக்கொள்வதாகக்  கூறும்    அவரது     அறிக்கையை   அவரின்   மகளும்   பிகேஆரின்  உதவித்   தலைவருமான    நூருல்   இஸ்ஸா    வாசித்தார்.

ஆனால்,  சிலாங்கூர்  பிகேஆர்   தலைவர்கள்   மட்டும்   மகாதிரைப்   பிரதமர்   வேட்பாளராக   ஏற்றுக்கொள்ள   மறுக்கிறார்கள்.

சிலாங்கூர்   பிகேஆருக்கு   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி    தலைவராகவும்   பிகேஆர்  மகளிர்    தலைவர்   ஸுரைடா  கமருடின்   துணைத்   தலைவராகவும்  உள்ளனர்.

பிரகடனத்தை   அடுத்து   ஸுரைடா  தலைவர்களை  “மறுசுழற்சி”   செய்யும்  பழக்கத்துக்கு   எதிர்ப்புத்    தெரிவித்தார்.

மகாதிருடன்  தனிப்பட்ட   முறையில்   பிரச்னை   எதுவும்   இல்லை    என்று  குறிப்பிட்ட   ஸுரைடா,  அவரை    ஹரபான்    அமைச்சரவையில்     “மூத்த  அமைச்சராக”   நியமிப்பது  பொருத்தமாக   இருக்கும்    என்றார்.

சிலாங்கூர்  பிகேஆர்  தொடர்புப்  பிரிவுத்   தலைவர்   ஹிஸ்வான்   அஸ்மான்   மலேசியாவுக்குப்  “புதுத்    தலைவர்கள்”   தேவை   என்றார்.