சுரங்கப்பாதை விவகாரம் ஒரு தேர்தல் தந்திரம் என்பது பினாங்கு மக்களுக்குத் தெரியும்- பிகேஆர் எம்பி

பினாங்கு   கடலடிச்   சுரங்கப்   பாதைத்   திட்டம்  சர்ச்சையாக்கப்பட்டு   எம்ஏசிசி   விசாரணையும்    மேற்கொள்ளப்பட்டிருப்பது   மாநில   அரசுமீது   நடத்தப்படும்  “வெளிப்படையான  தாக்குதல்”   என்கிறார்  பிகேஆர்   எம்பி   சிம்  ட்ஸே  ட்ஸின்.

14வது  பொதுத்   தேர்தல்    நெருங்கி   வருவதால்   மாநில   அரசின்மீதும்  முதலமைச்சர்   லிம்  குவான்  எங்மீதும்    “அரசியல்  நோக்கம்”  நோக்கத்துடன்  தாக்குதல்கள்   நடத்தப்படுகின்றன   என்றாரவர்.

“பிஎன்  உள்பட,  பல்வேறு    தரப்பினரும்   நடத்தப்படும்   தாக்குதல்களுக்கான  காரணம்     தெரிந்ததே.    மாநிலத்     தலைவர்களுக்கு    அரசாங்க  விவகாரங்களில்   கவனம்   செலுத்த  முடியாமல்     வாரி  இறைக்கப்படும்  குற்றச்சாட்டுகளுக்கு   விளக்கமளிப்பதே  வேலையாக    போய்விட்டது.  நடப்பது  ஒரு  வெளிப்படையான,  ஒட்டுமொத்தமான  ஊடகப்  போர்”,  என்றார்.

இந்தத்   தந்திரமெல்லாம்  பினாங்கு   மக்களுக்குத்    தெரியும்.  அவர்கள்  2008,  2013  தேர்தல்களைக்  கண்டு   வந்தவர்களாயிற்றே  என்றவர்  சொன்னார்.

“அந்தத்   தேர்தல்களிலும்     எண்ணற்ற   காணொளிகள்   உலா   வந்தன.  பல்வேறு   குற்றச்சாட்டுகள்    முன்வைக்கப்பட்டன. இப்போதும்   அதே  பாட்டுத்தான்.  ஆனால்,  இதெல்லாம்   நம்மிடம்    எடுபடாது”,  என  மாநில   வியூக  இயக்குனரான   சிம்  கூறினார்.

பினாங்கு   மக்கள்    சந்திக்கும்     வேளையில்    கடலடிச்  சுரங்கப்  பாதை    தொடர்பில்   எம்ஏசிசி  மேற்கொள்ளும்  நடவடிக்கைகள்  குறித்து   பேசத்தான்  செய்கிறார்கள்    ஆனால்,   அதைப்    “பொதுத்   தேர்தல்   தந்திரம்”  என்று  அவர்கள்  ஒதுக்கவும்  மறப்பதில்லை   என    அந்த    பாயான்   பாரு  எம்பி   கூறினார்.