என்.யு.தி.பி. : ஆசிரியர்கள் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவது, சர்ச்சையை உண்டாக்கலாம்

ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளில் பங்குபெறுதல் மற்றும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தல் போன்றவை, ஆசிரிய சமூகத்திற்குள்ளே ஆரோக்கியமற்ற சூழல்களை உருவாக்க முடியும் என, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத் தலைவர் கமாரோசாமான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல், பணியிடத்தில் சர்ச்சைக்கு வழிவகுக்கும், குறிப்பாக எதிர்த்தரப்பு அரசியலில் இணைந்த அல்லது ஆதரவு தெரிவிக்கும் ஆசிரியர்களுடன் விவாதத்திற்கு வழிவகுக்கும்.

“பணியிடத்தில் வாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, விவாதங்களில் ஆர்வமாக இருக்கும் போது, ஒருவருக்கொருவர் இணக்கமாக செயல்பட முடியாது.

“எனவே, அரசியலா அல்லது பணியா, ஆசிரியர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். அரசாங்கப் பணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்……. அரசியல்தான் வேண்டும் என்றால், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, முழுநேரமாக அரசியல் வேலையில் ஈடுபடுங்கள் என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்,” என்று மலேசியாகினியிடம் கூறினார்.

இருப்பினும், வெளிப்படையாகவோ அல்லது தீவிரமாகவோ இல்லாமல், ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர்கள் அரசியல் மனோபாவத்தை வெளிபடுத்துவது, மாணவர்களையும் குழப்பமடையச் செய்யும் என்றும் அவர் சொன்னார்.

பொதுத் தேர்தலில் வாக்களித்தலே, ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் அல்லது தனது அமைச்சில் இருக்கும் அதிகாரிகள், எதிர்க்கட்சியில் பதவி வகித்துகொண்டு, அரசாங்கத்தை எதிர்த்துப் போராட விரும்பினால், பணியிலிருந்து விளகிக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஹிட்ஷிர் காலிட் கூறியதை மேற்கோளிட்டு க்வோங் வா ஜிட் போ  வெளியிட்ட செய்தி குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 3-ம் தேதி, அம்னோவில் சேர ஆசிரியர்களை வலியுறுத்திய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோரின் அழைப்புக்கு எதிராக இந்த உத்தரவு உள்ளது.

அரசாங்க ஊழியர்கள், அரசியலில் குறிப்பாக எதிர்க்கட்சியில் ஈடுபடுவதை தடைசெய்வதாக, பொதுச் சேவை பணியாளர்கள் சுற்றறிக்கை கூறுகிறது என்றார் கமாரோசாமான்.

“இந்த ஒழுங்கு நடவடிக்கை நீண்ட காலமாக உள்ளது, ஆனால் அரசாங்கம் அதனை செயல்படுத்தவில்லை,” என்றதோடு, அரசியலில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்படும் ஆசிரியர்களை என்.யு.தி.பி. தற்காக்காது என்றும் கூறினார்.

இருப்பினும், அரசியல் கட்சிகளில் ஈடுபட விரும்பும் ஆசிரியர்கள், அமைச்சிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் உள்ளதாக அவர் கூறினார்.

“சட்டங்களை மீறாத வரை, ஆசிரியர்கள் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள் ….. ‘உணவளிக்கும் பெற்றோரை எதிர்ப்பது நல்லது அல்ல’ ,” என்றும் அவர் கூறினார்.