நிக் நஸ்மி : திவால் சட்டத்தில் திருத்தங்கள், மக்கள் திவாலாகும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை

கடந்த ஆண்டு, திவால் சட்டம் 1967-ல் செய்த திருத்தங்கள் மட்டும், நாட்டில் தீவிரமடைந்து வரும் திவால் சிக்கலைத் தீர்க்க போதுமானதாக இல்லை என்று, ஹராப்பான் இளைஞர் தலைவர், நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறியுள்ளார்.

“2013-2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 3,276 பொது ஊழியர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டனர்; கடன் பிரச்சினைகள் காரணமாக, 61,726 அரசு ஊழியர்கள் அவர்களது வருமானத்தில் 60 விழுக்காட்டிற்கும் குறைவான நிகர வருவாயை பெற்றனர்.

“அதுமட்டுமின்றி, 2013-ஆம் ஆண்டு முதல் 2017 பிப்ரவரி வரையில், திவாலானவர்களில் 21,676 அல்லது 25.4 விழுக்காட்டினர் 34 வயதுக்கும் குறைவானவர்கள். 1,000 க்கும் அதிகமானவர்கள் 25 வயதுடையவர்களாக – மிக இளம் வயது – உள்ளனர்,” என அவர் குறிப்பிட்டார்.

வேலை, சம்பளம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுகள் உட்பட, ஒட்டுமொத்த பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினால் மட்டுமே திவால் சட்டத் திருத்தம் வேலை செய்யும் என்று கூறினார்.

எனவே, புதிய வேலை வாய்ப்புகள், குறைந்தபட்ச சம்பளத்தில் ஏற்றம், ஜிஎஸ்டி ஒழிப்பு போன்ற, ஹராப்பான் இளைஞர்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘இளைஞர் நம்பிக்கை வாக்குறுதிகள்’ , இந்தத் திவால் சிக்கலைக் குறைப்பதற்கான முக்கியக் கூறுகள் என்றார் அவர்.