சீனப் புத்தாண்டை முன்னிட்டு 13 பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலை

பிப்ரவரி 16 மற்றும் 17-ல் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பண்டிகை கால பருவ விலை கட்டுப்பாட்டு திட்டத்தின் வழி, உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு (கே.பி.டி.என்.கே.கே) 13 வகையான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

அந்த விலை கட்டுப்பாடு, எதிர்வரும் 10 பிப்ரவரி தொடங்கி 21 பிப்ரவரி வரை 12 நாட்களுக்கு அமலில் இருக்குமென, அமைச்சர் ஹம்ஷா ஷைனுடின் கூறினார்.

பட்டியலிடப்பட்டுள்ளப் பொருள்களுள் கோழி, கோழி முட்டை (கிரேட் எ.பி.சி) , முட்டைக்கோசு, பூண்டு, இறால், பன்றி இறைச்சி போன்றவையும் அடங்கும்

“வர்த்தகர்கள் அந்த 13 பொருட்களைக் குறைந்த விலையில் விற்க வேண்டும் அல்லது அதிகபட்ச விலையைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் மற்றப் பொருட்களுடன் சிறப்பு விலையை வேறுபடுத்தி காட்ட, இளஞ்சிவப்பு அட்டையில் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்,” என இன்று விலை கட்டுப்பாட்டு பொருட்களின் பட்டியலை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

தீபகற்பத்தில் 91 மாவட்டங்கள், சரவாக்கில் 32, சபாவில் 27 மற்றும் லாபுவானில் ஒரு மாவட்டம் ஆகியவை இந்தப் பண்டிகை கால பருவ விலை கட்டுப்பாட்டு திட்டத்தில் உள்ளன.

விலை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தவறியவர்களுக்கு, விலை கட்டுப்பாடு மற்றும் எதிர்ப்பு இலாபமீட்டும் சட்டம் 2011 கீழ், RM 100,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“கட்டுப்பாட்டு பொருட்களுக்கு இளஞ்சிவப்பு விலை குறிச்சொல் வைக்காத குற்றத்திற்கு, RM10,000 வரை அபராதம் அல்லது தனிநபருக்கு RM5,000, நிறுவனத்திற்கு RM 20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் ,” என்றும் அவர் கூறினார்.

கே.பி.டி.என்.கே.கே. அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகர்களின் நடவடிக்கைகளில் இருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாக்க, கடுமையான கண்காணிப்புகளைச் செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பயனீட்டாளர் மற்றும் விற்பனையாளர்கள் www.kpdnkk.gov.my  என்ற வலைத்தளத்தில் பொருட்களின் விலைகளைச் சரிபார்க்கலாம்.