மார்கோஸைவிட மோசமான நஜிப் வெற்றி பெற்றால் நாடு திவாலாகிவிடும், மகாதிர் கூறுகிறார்

 

பிரதமர் நஜிப் ரசாக் நடத்தும் தவறான ஆட்சி பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரியும் கொள்ளைக்காரருமான பெர்டினனட் மார்கோஸின் ஆட்சியைவிட “மிகக் கடுமையானது” என்று மகாதிர் முகமட் அறிவித்துள்ளார்.

நஜிப் புரிந்துள்ள குற்றங்களுக்கு “தெளிவான ஆதாரங்கள்” இருக்கின்றன என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

உலக மக்களின் கண்களில் நஜிப் புரிந்துள்ள அதிகார அத்துமீறல்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நஜிப்பின் மலேசியா ஒரு கொள்ளைக்கார ஆட்சி என்று வர்ணிக்கப்படுகிறது, இனிமேலும் இங்கு ஜனநாயக ஆட்சி இல்லை. சட்ட ஆளுமை அப்பட்டமாக நஜிப்பால் புறக்கணிக்கப்படுகிறது. இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று மகாதிர் மேலும் பதிவு செய்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபராக மார்கோஸ் 1965 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். 1972 லிருந்து 1981 வரையில் சர்வாதிகார ஆட்சி புரிந்தார். அவர் புரியாத அட்டகாசமே இல்லை. இறுதியில், 1986 ஆம் ஆண்டில் மார்கோஸ் மக்கள் சக்தி புரட்சியின் வழி வீழ்த்தப்பட்டார்.

எப்படியாவது (நல்ல வழியிலாவது கெட்ட வழியிலாவது), நிச்சயமாக கெட்ட வழியில் பொதுத் தேர்தலில் நஜிப் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார், ஏனென்றால் நஜிப் தோற்றால் சிறைவாசம் நிச்சயம் என்கிறார் மகாதிர்.

மேலும், நஜிப் குறுகிய வித்தியாசத்தில் தோற்றால் அவர் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்வார் என்றும் மகாதிர் மீண்டும் கூறுகிறார்.

மார்கோஸ் இராணுவம் மற்றும் போலீஸ் படை ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சி செய்தார். அவர் அவற்றின் ஆதரவை இழந்தவுடன் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்று குறிப்பிட்ட மகாதிர், தற்போதைய மலேசியாவில் இராணுவம் மற்றும் போலீஸ் படைத் தலைவர்கள் பிரதமரின் ஆதரவாளர்கள், அல்லது குறைந்தபட்சம் நஜிப்பின் செயல்களோடு இணங்கிப் போகிறவர்கள் என்கிறார்.

நஜிப் சட்டத்தை தெளிவாக மீறினால்கூட அவர்கள் அதைப்பற்றி அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை என்றாரவர்.

நஜிப் கட்டளை வழி ஆட்சி செலுத்தும் சாத்தியம் மிக உண்மையானது என்று மக்கள் நம்புகிறார்கள். இதைத் தடுப்பதற்கான ஒரே வழி: எதிரணி மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற வேண்டும்.

நஜிப் வெற்றி பெற்றால் நாடு திவாலாகிவிடும் என்று மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து எதிர்வினையாற்ற மலேசியாகினி விடுத்த வேண்டுகோளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.