நஜிப்: இம்மாதக் கடைசியில் பி40 இந்தியர்களுக்கு சிறப்பு அமனா சஹாம் ஒதுக்கீடு தொடங்கப்படும்

 

இன்று லங்காவியில் சுமார் 1,000 இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு “தே தாரிக் நிகழ்ச்சியில்” பேசிய பிரதமர் நஜிப் ரசாக் இம்மாதக் கடைசியில் பி40 வகையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு அமனா சஹாம் 1மலேசியா (எஎஸ்1எம்) ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதை அறிவித்த பிரதமர் மொத்தம் ரிம500 மில்லியன் இதற்காக ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியச் சமூகத்தை சேர்ந்த அதிகமானவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவருக்கு 5,000 பங்குகள் மட்டுமே கொடுக்கப்படும் என்றாரவர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 27இல், 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்காக 1.5 மில்லியன் அமனா சஹாம்1எம் கூடுதல் பங்குகள் வெளியிடப்படும் என்றும் அதில் முதலீடு செய்யும் ஒருவருக்கு 30,000 பங்குகள் மட்டுமே கொடுக்கப்படும் என்ற கட்டுப்பாட்டையும் நஜிப் அறிவித்தார்.

அப்பங்குகளின் விநியோகம் ஜனவரி 29இல் தொடங்கியது.

மேலும், பி40 வகையச் சேர்ந்த 100,000 இந்தியக் குடும்பங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க கடன் பெறுவதற்கு சிறப்பு கடன் முதலீட்டு திட்டத்திற்கு ரிம500 மில்லியனையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டமானது இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பல இதர திட்டங்களில் ஒரு பகுதி மட்டுமே ஆகும் என்று நஜிப் மேலும் கூறினார்.