எங்கள் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதே, பேட்ரியோட் மந்திரியிடம் கூறியுள்ளது

அரசு சாரா ஓய்வுபெற்ற தேசிய நாட்டுப்பற்று சங்கம் (பெட்ரியோட்) நாட்டிற்கான தங்கள் விசுவாசத்தை எந்தவொரு தரப்பினரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைவூட்டியுள்ளது.

பெட்ரியோட் தலைவர், முகமட் அர்ஷாட் ராஜி, இராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அரசுசாரா இயக்கம், நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடியவர்கள் என்றார்.

“நாட்டுப்பற்று பற்றி நாங்கள் பேசினால், அது எங்கள் மனதில் இருந்து வருவது,” என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக, தங்கள் தரப்பு ஒரு தேசபக்திப் பட்டறையை நடத்த திட்டமிட்டுள்ளது என்ற பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனின் அறிக்கையை அவர் மறுத்தார்.

“பொதுமக்களுக்கு, குறிப்பாக நாட்டின் தலைவர்களுக்கு மரியாதையுடன் நாங்கள் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம், அரசருக்கும் நாட்டிற்கும் உள்ள எங்கள் பக்தியின் மீது யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

ஹிஷாமுடினின் அறிக்கை ‘பொறுப்பற்றது, தன்னிச்சையானது’ என்று அவர் விவரித்தார், ஏனெனில் அமைச்சர் தங்கள் ‘இளைஞர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் தேசபக்திப் பட்டறை’யின் பரிந்துரையை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றார் அவர்.