ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விளைநிலங்களை பாழாக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் 2 கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.

முதல் கட்டமாக 22 நாட்களும் 2-வது கட்டமாக 184 நாட்களும் நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஹைட்ரோகார்பனுக்காக போடப்பட்ட ஆழ்துளை குழாய்கள் மூடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் ஓராண்டாகியும் ஓஎன்ஜிசி அமைத்த ஆழ்துளை குழாய்கள் மூடப்படவில்லை. இதையடுத்து இந்த குழாய்களை மூட வலியுறுத்தி இன்று நெடுவாசல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நெடுவாசல் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: