பிரித்து வைக்கப்பட்ட பள்ளிகள் ஒற்றுமைக்கு நல்லதல்ல, நஜிப் கூறுகிறார்

 

தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளியையும் பிரித்து வைத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைப் பாதித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

செய்திகளின்படி, 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் கல்வி அமைவுமுறையைப் புதுப்பிக்கப் போவதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார்.

இன்று மலாய்க்காரர்கள் தேசியப்பள்ளியில் இருக்கிறார்கள். அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளும் சமயப்பள்ளிகளும் இருக்கின்றன என்று நஜிப்பை மேற்கோள் காட்டி த ஸ்டார் டெய்லி கூறுகிறது.

நாம் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்திருக்கிறோம். நாம் இப்போது தனியாக பிரிக்கப்பட்ட அறைகளில் கற்கும் முறையைக் கொண்டிருக்கிறோம் என்று எக்ஸிஎடா மற்றும் செல்கோம் தொழிலாளர்களுடம் நேற்று நடத்திய ஒரு சந்திப்பில் நஜிப் கூறினார்.

நம்மிடம் இதற்கு உடனடியான தீர்வு இல்லை. ஒருவர் மற்றொருவருடன் தொடர்புகொண்டு செயல்படுதல் மற்றும் பரஸ்பர மரியாதை கொண்டிருத்தல் போன்ற நற்பண்புகளை நாம் பள்ளியில் போதிக்கலாம் என்று நஜிப்பை மேற்கொள் காட்டி த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

மலேசியாவின் இன அடிப்படையிலான, பிரித்து வைக்கப்பட்ட பள்ளி அமைவுமுறை பிரிட்டீஷ் காலனித்துவ வழி வந்ததாகும். இது வெவ்வேறு மொழி-வகை பள்ளி ஆதரவாளர்களிடையே கடும் விவாதப் பொருளாகியுள்ளது.

தேசிய ஒற்றுமைக்கு சீன மற்றும் தமிழ் தாய்மொழிப்பள்ளிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதும் மலாய் தேசியவாதிகள் அவற்றை மூட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது சீன மற்றும் தமிழ் கல்விமான்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பது தங்களுடைய குழந்தைகளின் உரிமை என்று அவர்கள் நம்புகின்றனர்.

இதனிடையே, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் ஆங்கிலமொழிப்பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும் என்று கோருகின்றனர்.

நான்காவது தொழில் புரட்சிக்கு தயாராவதற்காக கல்வி அமைவுமுறையை அரசாங்கம் மறு ஒழுங்கு செய்யும் என்று நஜிப் தெரிவித்ததாக த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

-த மலேசியன் இன்சைட்