த எக்கோனமிஸ்ட் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட உதவி அளிக்க இஙா முன்வந்தார்

 

பிரதமர் நஜிப்பை வார இதழான த எக்கோனமிஸ்ட் “திருடன்” என்று வர்ணித்திருந்ததற்காக அதன் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட உதவி அளிக்க முன்வந்தார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இஙா கோர் மிங்.

அந்த வார இதழ் அதன் சமீபத்திய கட்டுரையில் பிரதமர் நஜிப் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியை திருடிக்கொள்வார் என்று எழுதியிருந்தது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. லண்டனில் இருக்கும் இவர்கள் நமது பிரதமரை ஒரு திருடன் என்று அவமானப்படுத்தியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் இன்று அவர் கூறினார்.

அந்த இதழுக்கு எதிராக பிஎன்னிலிருந்து எவரும் சட்ட நடவடிக்கை எடுக்க முயலாதது தம்மை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது என்று இஙா மேலும் கூறினார்.

“உங்களால் வழக்கிற்கான செலவை ஏற்க முடியவில்லை என்றால், அது ஓகே. நான், பெருவாஸ் (இங்ஙே கூ ஹாம்). பூச்சோங் (கோபிந்த் சிங் டியோ), ஆகியோர் பெக்கானுக்கு (நஜிப்புக்கு), அவர் திருடன் என்று குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை என்றால், இலவச சட்ட உதவி அளிக்க முடியும்.

“நாங்கள் லண்டனில் சட்ட நடவடிக்கை எடுப்போம்”, என்று இஙா கூறினார்.

ஆனால், இந்த அவமரியாதை பற்றி நஜிப்பும் அரசாங்கமும் தொடர்ந்து மௌனமாக இருப்பதாக இஙா மேலும் கூறினார்.