மனிதக் கடத்தலுக்காக 200 பேருக்குப் பிடியாணை

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை, சட்டவிரோதமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், லிபியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மீது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என, லிபிய சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (15) அறிவித்தது.

“குடியேற்றச் செயற்பாடுகள், மனிதக் கடத்தல், சித்திரவதை, கொலை, வன்புணர்வு ஆகியவற்றோடு தொடர்புபட்ட, 205 பேருக்கான பிடியாணைகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம்” என, சட்டமா அதிபர் திணைக்களத்தின் புலனாய்வு அலுவலகப் பணிப்பாளர் செடிக் அல்-சூர் தெரிவித்தார்.

இவ்வாறு மனிதக் கடத்தலில் ஈடுபடும் குழுவில், பாதுகாப்புப் படை, குடியேற்றவாசிகளின் தடுப்பு முகாம், லிபியாவுக்கான ஆபிரிக்க நாடுகளின் தூதர அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது.

முஹம்மர் கடாபியின் ஆட்சி, 2011ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, குழப்பங்களைச் சந்தித்துள்ள லிபியா, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பாவுக்குச் செல்வதற்கான முக்கியமான புள்ளியாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவுக்கான அகதிகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, லிபியாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகள், மனிதக் கடத்தலைத் தடுக்குமாறு கோரின. இதற்காக, லிபியாவுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், இவ்வாறு தடுக்கப்படும் குடியேற்றவாசிகள், துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதேபோல், லிபியாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடியேற்றவாசிகள், ஐரோப்பாவை நோக்கி இன்னமும் செல்கின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk