அமெரிக்க டாலருக்கு எதிராக, ரிங்கிட்டின் மதிப்பு அதிகரிக்கும்

அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைவதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் ரிங்கிட்டுக்கான தேவை அதிகரிக்கும். இது அமெரிக்க டாலருக்கு எதிராக, 3.88-3.92 க்கு இடையே வர்த்தகம் செய்யப்படலாம் என வணிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், எச்ஆர் மெக்மாஸ்டருக்கு பதிலாக வேறொருவரை நியமித்தல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனைப் பதவியிலிருந்து விலக்குதல் போன்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செயல்கள், அமெரிக்க அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனும் அச்சத்தில், பாதுகாப்பாக இருப்பதாகக் கருதப்பட்ட அமெரிக்க நாணயத்தின் மதிப்பு பாதிப்படையலாம் என அவர் சொன்னார்.

“இது பிற நாட்டு நாணயங்களின், குறிப்பாக பொருள்கள் உற்பத்தி மற்றும் விரைவாக வளர்ந்துவரும் நாடுகளின் நாணய மதிப்பை அதிகரிக்க உதவும்.

“ஆனால், வர்த்தகப் போரின் சாத்தியங்கள் பற்றிய கவலைகளால், வர்த்தகம் மீதான ஆர்வம் உலகளவில் குறையலாம்,” என்றும் அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இவ்வாரத் தொடக்கத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளை இலக்கு வைத்து அவர் அவ்வாறு அறிவித்தார்.

அமெரிக்காவுடனான சீனாவின் 100 பில்லியன் டாலர் வர்த்தக உபரிகளைக் குறைக்க வலியுறுத்தியே, இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.