70 சதவித ஆதரவுடன் புதின் மீண்டும் அதிபராவார், ரஷ்ய ஊடகங்கள் கணிப்பு..

ரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. வாக்களிக்க தகுதியுடைய மக்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

புதினுக்கு நிகராக அதிபர் தேர்தலில் யாரும் போட்டியிடாத நிலையில், மக்களின் ஆதரவும் அவருக்கே உள்ளதாக தெரிகிறது. சுமார் 70 சதவிகிதம் மக்கள் புதினுக்கு ஆதரவாக இருப்பதால் சக போட்டியாளர்கள் அவரின் அருகே நெருங்க முடியாத நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.

முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை மற்றும் 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை அதிபர் பதவியில் உள்ளார். இந்த முறையும் அவர் வெற்றி பெற்றால் 2024-ம் ஆண்டு வரை இந்த பதவியில் இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் அதிபராக இருந்தவர் என்ற பெயரை புதின் பெறுவார்.

வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்பதால் விரைவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-athirvu.com