பினாங்கு சுரங்கப்பாதை: மலிவு விளம்பரம் தேடிக்கொள்ள முனைகிறார் வேள்பாரி

பினாங்கு  சுரங்கப்பாதை   விவகாரத்தைப்  பயன்படுத்திக்கொண்டு  மலிவான  விளம்பரம்     தேடிக்கொள்ளும்   முயற்சிகளை   மஇகா   பொருளாளர்   எஸ்.வேள்பாரி   நிறுத்திக்கொள்ள   வேண்டும்    என   பி.இராமசாமி    வலியுறுத்தினார்.

அவ்விவகாரம்    தொடர்பில்   எம்ஏசிசி  தடுத்து  வைத்துள்ள  சந்தேக  நபர்  ஒருவருடன்  புகைப்படம்   எடுத்துக்கொண்டிருப்பது   குறித்து  பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்   விளக்கமளிக்க   வேண்டும்   என்று   வேள்பாரி  கேட்டுக்கொண்டிருப்பது  பற்றிக்   கருத்துரைத்தபோது   பினாங்கு  துணை  முதல்வர் II   இவ்வாறு    கூறினார்.

மாநில   அரசின்   தலைவர்  என்ற  முறையில்   லிம்முக்கு  “அதைவிட   அவசரமாகக்  கவனிக்க  வேண்டிய   வேலைகள்”  உண்டு  என்றாரவர்.

“லிம்    சிறிது  காலத்துக்கு  முன்பு  அந்த  மனிதருடன்   புகைப்படம்    எடுத்துக்கொண்டிருந்தால்கூட    அந்த   மனிதர்   பற்றிய  விவரங்களை    அவர்   தெரிந்து  வைத்திருப்பார்   என்பது  நிச்சயமல்ல.

“அரசாங்கத்  தலைவர்கள்   முன்பின்   தெரியாத  குழுக்களுடனும்   தனிப்பட்டவர்களுடனும்   படமெடுத்துக்கொள்வது   வழக்கமான   ஒன்றுதான்”,  என  இராமசாமி  குறிப்பிட்டார்.

ஏனென்றால்  தேர்ந்தெடுக்கப்பட்ட    பிரதிநிதிகள்     தம்மிடம்   வருவோரிடம்    ”தோழமை  பாராட்ட  வேண்டியுள்ளது”  என்றாரவர்.