சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு: இரா.சம்பந்தன்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சட்டத்தின் பிரகாரம், எமது உரித்து, எமது உரிமை, சிவில் – அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தம் மற்றும் பொருளாதார சமூக கலாசார விடயங்கள் சம்மந்தமான சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அவ்விதமான உள்ளக சுயநிர்ணய உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இதைத் தான் சர்வதேசத்திடம் கேட்டு நிற்கிறோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலை திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒருமித்த நாட்டுக்குள், பிளவுபடுத்தப்பட முடியாத நாட்டுக்குள், எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், எமது இறையான்மையின் அடிப்படையில், அதியுச்ச அதிகாரப் பகிர்வு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில், எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் நாங்கள் கேட்கின்றோம். அது தான் எமது கொள்கை. அது தான் எமது நிலைப்பாடு. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். எவரும் இதனை மறுக்கவில்லை.

ஒரு காலத்தில், தமிழீழம் தான் நிலைப்பாடு என்று கூறியவர்களும் கூட, இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆகவே, இதை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். இதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால், எங்கள் மத்தியில் போட்டி, எதிர்ப்பு இருந்தால், அதை முன்னெடுக்க முடியாது. இன்றைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு ஏறத்தாழ முழுமையாக எங்களுக்கு இருக்கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2013, 2014 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு, 2015ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கமும் அதை, ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தது. அந்தத் தீர்மானம், 2017ஆம் ஆண்டில், மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், அதில் எமது சகல கருமங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

அதனை நிறைவேற்றுவதற்கு, 2019ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையில் கால அவகாசம் இருக்கின்றது. ஆகவே, அதை நிறைவேற்ற வைக்கவேண்டும். அதை நிறைவேற்றாது விட்டால், சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகின்றதென்பதைச் சொல்ல வேண்டும். அதில் என்ன நடக்கிறதென்பதை நாங்கள் அறிய வேண்டும்.

எமது மக்களை சர்வதேச சமூகத்தால் கைவிட முடியாது. நாங்கள் தனி ஈழத்தைக் கேட்டோம். அதனைக் கைவிட்டும் விட்டோம். 30 வருட காலமாக இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. மனித உரிமைகள் சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில், எம்மை ஆட்சி புரிவதற்கு, ஓர் அரசாங்கத்துக்கு எமது சம்மதம் இருக்க வேண்டும். எமது இணக்கப்பாடு இருக்க வேண்டும். 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரையில், எமக்கு குறிப்பிட்ட ஆட்சி முறை தான் தேவையென்றும் கேட்கின்றோம்.

எமது மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு விடிவு வேண்டும். எமது மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். குறிப்பாக காணாமல் போனோர் பிரச்சினை, காணி விடுவிப்பு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ளவர் பிரச்சினை. இந்த எல்லாக் கருமங்களிலும் ஒரளவுக்கு முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், போதியளவுக்கு முன்னெற்றம் ஏற்படவில்லை.

அரசாங்கங்கள், உண்மை நிலைமைகளை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அநீதிகளை இழைக்கப்பட்ட அநியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் தெளிவாக கூறவேண்டும். அவ்வாறு கூறி தமிழ் மக்களுக்கு நியாயம், நீதி வழங்க வேண்டியது எங்டகளுடைய கடமை. அந்தக் கடமையில் இருந்து நாங்கள் தவற முடியாது என்பதையும், சிங்கள மக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: