ஜிஎஸ்டிக்கு எதிரான ஹரப்பான் பரப்புரை ஏப்ரல் 1 இல் தொடங்கிறது

 

ஜிஎஸ்டி வரிக்கு எதிரான பரப்புரையை எதிர்வரும் ஏப்ரல் 1 இல் தொடங்குவதற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவமன்றம் தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 1 ஜிஎஸ்டி வரியை பிரதமர் நஜிப் அறிமுகப்படுத்திய மூன்றாம் ஆண்டு நிறைவு நாள்.

அப்பரப்புரையின் கருப்பொருள் “மக்கள் ஜிஎஸ்டியை நிராகரிக்கின்றனர்” என்பதாகும்.

இன்று தொடங்கி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டுவதற்காக மக்கள் வாங்கும் பொருள்களுக்கான ரசீதை முகநூல், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக “#RakyatTolakGSTஅல்லது #PeoplevsGST” க்கு அனுப்புமாறு இன்று மதியம் மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.

ஜிஎஸ்டிக்கு எதிரான நடவடிக்கைகளை தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் தேர்தலில் வேட்பாளர்களாக வரவிருப்பவர்கள் அவர்களுடைய பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நேற்று, ஹரப்பான் தலைவர் மகாதிர் ஜிஎஸ்டிக்கான தேவையில்லாமல் மலேசியா மேம்பாடடைந்துள்ளது என்று வாதிட்டார்.

ஜிஎஸ்டி வரியால் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளத்தைச் சுட்டிக் காட்டிய அவர், ஜிஎஸ்டியை அகற்றிவிட்டால் அது நிச்சயமாகக் குறையும் என்றார்.

ஜிஎஸ்டியை அகற்றுவதால் நாட்டின் நிருவாகம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றாரவர்.