மெட்ரிகுலேசன், ஐ.பி.தி.ஏ.-யில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் பொது உயர்க்கல்வி நிறுவனங்களில் (ஐ.பி.தி.ஏ.) இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று தெரிவித்தார்.

நாட்டின் ஐ.பி.தி.ஏ.-வில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது ஏழு விழுக்காடு இலக்கை எட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.

“இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, மெட்ரிகுலேஷன் இடங்களை அதிகரிப்பதா அல்லது துறைகளை அதிகரிப்பதா என அரசாங்கம் ஆய்வு செய்துவருகிறது.  பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள்  மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

“அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கமாக, நாட்டின் தேசிய வளர்ச்சி ஓட்டத்தில் எவரும், ஒருபோதும் கைவிடப்படக்கூடாது என்பதை நாம் எப்போதும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

இன்று, சுமார் 700 பேர் கலந்துகொண்ட, ‘மைநாடி’ அறக்கட்டளை நிகழ்ச்சில், அவர் இவ்வாறு பேசினார்.

இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நிறுவப்பட்ட, அரசு சார்பற்ற நிறுவனமான ‘மைநாடி’ அறக்கட்டளையின் தலைவர், டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரையும் அவருடன் இருந்தார்.

இதற்கிடையில், பிரதமர், குறைந்தபட்சம் 40 % வீட்டு வருமானம் (B40) பெறும் 100,000 இந்திய குடும்பங்கள், ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கப்பட்ட அமானா சஹாம் 1மலேசியா (A1SM) சிறப்பு முதலீட்டு திட்டத்தில் பங்கேற்க முடியும் என்றார்.

மக்களுக்கு நல்வாழ்வு மற்றும் வளம் ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒரு சமூகமாக முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கம் சமுதாயங்களுக்கிடையே ‘நம்பிக்கை’-யை ஊட்டி வருவதாக நஜிப் தெரிவித்தார்.

“தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ், இந்திய சமூகம் நாட்டில் சரியான இடத்தில் இருப்பதை உறுதிபடுத்த, நாங்கள் தொடர்ந்து உதவிகள் செய்வோம், அதுதான் என் நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா