பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியரை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேர் விடுதலை..

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

அந்த சூளை அமைந்துள்ள இடத்தில் கூலித் தொழிலாளிகளுக்கு கட்டித் தரப்பட்டுள்ள கொட்டகையில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இந்த தம்பதியர், தங்களது 4 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

சூளையின் உரிமையாளரான முஹம்மத் யூசுப் குஜ்ஜார் என்பவர் இந்த தம்பதியருக்கு ஒழுங்காக கூலியை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அந்த கிறிஸ்தவ தம்பதியருக்கும் முஹம்மத் யூசுப் குஜ்ஜாருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாகவும், எங்களது கூலி பாக்கியை தராவிட்டால் வேலையை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சஹ்ஜாத் மசி கூறியுள்ளார்.

வேலையை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் எனக்கு 5 லட்சம் ரூபாயை தந்து விட்டுதான் செல்ல முடியும் என்று சூளையின் உரிமையாளர் மிரட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த கிறிஸ்தவ தம்பதியர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக்கங்களை தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவமதித்து விட்டதாக சக் கிராமத்தில் உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 4-11-2014 அன்று தகவல் பரவியது.

இது, அப்பகுதியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி சூளை உரிமையாளர் பரப்பி விட்ட கட்டுக்கதை என்று கூறப்படுகின்றது.

இதைக் கேட்டு கொதித்தெழுந்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த சுமார் ஆயிரம் பேர் கொண்ட அந்த கும்பல், அந்த தம்பதியரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்தது.

இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் அந்த தம்பதியர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நல்ல வேளையாக அவர்களின் 4 குழந்தைகளும் ஆபத்தில்லாமல் தப்பியது ஆச்சரியமாக உள்ளது என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு முதியவர் தெரிவித்தார்.

இந்த கொடூர சம்பவம் முழுவதும் போலீஸ்காரர்களின் முன்னிலையில் நடைபெற்றதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50 பேரை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அவர்களில் 5 பேருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் மரண தண்டனையும், மேலும் 10 பேருக்கு சிறை தண்டனையும்  விதிக்கப்பட்டது. மீதமுள்ள 20 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

-athirvu.com