காவிரி மேலாண்மை வாரியம்… மீண்டும் தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்ட பாஜக அரசு!

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இப்போது திடீரென விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு போவதன் மூலம் தமிழகத்துக்கு பட்டை நாமத்தை மீண்டும் போட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், காவிரி நதிநீரை பங்கீடுவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது.

ஆனால் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு இதுவரை போதுமான அக்கறை காட்டவில்லை. மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் தமிழக பாஜகவே திடீரென இல. கணேசன் தலைமையில் ஒரு குழுவை காவிரிக்காக அமைத்து டெல்லிக்கு அனுப்புகிறது.

கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசு

தமிழகத்தின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத அரசுதான் மத்திய பாஜக அரசு. தமிழக மக்களின் எந்த ஒரு உணர்வுக்குமே மதிப்பளிக்கக் கூடாது என்பதில் படுபிடிவாதமாக இருக்கிறது மத்திய பாஜக அரசு. ஏற்கனவே உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட போது அதெல்லாம் முடியாது என மறுத்து தமிழகத்தின் முதுகில் குத்தியதும் இந்த பாஜக அரசுதான்.

பிடிவாதம் காட்டும் தமிழிசை

இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை; ஒரு ஸ்கீம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என குறுக்குசால் ஓட்டுகிறது பாஜக. இதனால்தான் காவிரி மேலாண்மை வாரியமோ, காவிரி மேற்பார்வை குழுவோ எதை மத்திய அரசு அமைத்தாலும் தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

காவிரியும் கர்நாடகா தேர்தலும்

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை காரணமாக வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலங்கடத்துவது என்பதும் மத்திய அரசின் திட்டமாக இருந்தது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டமாகவே கூறிவிட்டார்.

விளக்கம் கேட்கும் மத்திய அரசு

இப்போது தமிழகம் நினைத்தபடியே திடீரென உச்சநீதிமன்றத்திடம் போய் விளக்கம் கேட்கிறதாம் மத்திய அரசு. நீங்கள் சொன்னது குழுவா? மேலாண்மை வாரியமா? என ஆறுவார கெடுவின் கடைசி நாளான இன்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க இருக்கிறதாம் மத்திய அரசு.

வஞ்சகத்தின் உச்சம்

இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, மேற்பார்வை குழு, மேலாண்மை வாரியம் என ஏமாற்றிவிட்டு இப்போது திடீரென உச்சநீதிமன்றத்திடம் சந்தேகம் கேட்கிறதாம் மத்திய அரசு. இது காலவரையறையே இல்லாமல் காவிரி வழக்கை இழுத்தடிக்கும் அப்பட்டமான துரோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆம் தமிழகத்துக்கு பட்டை நாமத்தை மீண்டும் சாத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு!

tamil.oneindia.com

TAGS: