‘பிஎன்-க்கு நன்றி தெரிவிப்பது கடினமல்ல, தராசில் குறியிடுங்கள்’

நகர்ப்புற நலன், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் நோ ஓமர் பாரிசான் நேசனல் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பது கடினமான வேலை அல்ல என்று கூறியுள்ளார்.

இன்று, புத்ரா உலக வாணிப மையத்தில், அவ்வமைச்சின் கீழ் சுமார் 1,200 வீட்டுத் திட்ட உதவி பெறுநர்களிடம் பேசுகையில், அவர்களை நன்றியுடன் இருக்கச் சொல்லி நோ நினைவுபடுத்தினார்.

“குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாத்து வரும் பி.என். அரசாங்கத்திடம் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

“பி.என்.-னுக்கு நன்று சொல்வது கடினமானது அல்ல. அதனை வெளிப்படுத்துவது சிரமமல்ல. பிஆர்யு (பொதுத் தேர்தல்) நெருங்கிவிட்டது.

“5 நிமிடங்கள் ஆகாது. வாக்களிக்கும் போது தராசு சின்னத்தைப் பாருங்கள், அதற்கு குறியிடுங்கள். பிஎன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஒருவழி இதுதான்,” என்று நோ கூறினார்.

அரசாங்கத்தின் மலிவுவிலை வீட்டு வசதி முயற்சிகளை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதையும் நோ குறிப்பிட்டார்.

“நமது அன்புக்குரியப் பிரதமர் நஜிப் ரசாக், இந்த வீட்டு பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அவருடைய இதயத்திற்கு அருகிலேயே இந்தப் பிரச்சனை இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய உலக நகர அரங்கு அறிக்கை (வோர்ல்ட் அர்பன் ஃபோரம்), மலிவுவிலை வீட்டு வசதிகளை வழங்குவதில் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளது என்று நோ குறிப்பிட்டார்.

“பிஎன் அரசு மக்களுக்கு உதவுவதை வெளிநாட்டு அமைச்சர்கள் பாராட்டி பேசும்போது, பிஎன் அரசாங்கத்தின் சேவைகளை மதித்து, மலேசியர்கள் அரசாங்கத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க முடியாதா?

“எதிர்க்கட்சினரின் தூண்டுதலுக்குப் பலியாகிவிடாதீர்கள்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.