ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் ஆணையம் ‘சுதந்திரமாக’ செயல்படும், அன்வார் உறுதியளித்தார்

14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிவிட்டால், தேர்தல் ஆணையம் ஓர் உண்மையான, சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

பிகேஆர் பொதுத் தலைவரான அவர், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள ‘பொய்ச்செய்தி’ சட்டத்தையும் ஹராப்பான் அகற்றிவிடும் என்றும் உறுதியளித்தார்.

“முற்றிலும் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை அமைப்பதோடு; ‘பொய்ச் செய்தி’ சட்டத்தையும் ஹராப்பான் அகற்றிவிடும். ஆக, பாரிசான் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து விரட்ட, மலேசியர்கள் அனைவரும் வாக்களிக்க வெளிவர வேண்டும்,” என்று சிறையிலிருக்கும் அன்வார் ஓர் அறிக்கையின் வாயிலாக மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் புதிதாக இயற்றப்பட்ட தேர்தல் எல்லை மறுசீரமைப்புக் குறித்து கூறுகையில், “அது ஒரு முக்கியமான விஷயம், சில வாரங்களுக்கு விவாதிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று,” என்றார் அவர்.

எனினும், வெறும் இரண்டு மணி நேரத்தில், அது அவசர அவசரமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இது ஒரு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, சட்ட ரீதியில் மறுபரிசீலனை செய்யப்பட்ட நடைமுறை அல்ல, மாறாக அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என்று தெளிவாகத் தெரிகிறது.

“பழைய தொகுதி எல்லை பிரிவைப் பயன்படுத்தினால், தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதை பாரிசான் ஒப்புக்கொண்டுள்ளதையே இது காட்டுகிறது,” என்றார் அன்வார்.

‘பொய்ச் செய்தி’ சட்ட மசோதாவை, அவசர அவசரமாக நிறைவேற்றியதையும் அன்வார் விமர்சித்தார். 1எம்டிபி மோசடி, அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்ற ஊழல் மோசடிகள் பற்றி விமர்சிப்பதைத் தடுக்கும் முயற்சியாக இப்புதிய சட்ட அமலாக்கத்தை பி.என். விரும்புவதாக அவர் கூறினார்.

“பொய்ச் செய்தி சட்டவரைவு இளைஞர்களைப் பிரதான இலக்காகக் கொண்டது, இவர்கள்தான் இந்தச் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள். பொய்ச் செய்தி அல்லது தவறான செய்திகளை ‘அவதூறு சட்ட’ங்களால் தீர்க்க முடியும்.

“பில்லியன் கணக்கான பொது மக்கள் நிதியைத் திருடிய திருடர்களை, எது பொய் செய்தி என்பதை முடிவு செய்ய அனுமதிக்கலாமா?” என்று அவர் கேட்டார்.