இனி எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது- நஸ்ரி

அறுபதாண்டுகளுக்கு  முன்பு   நாடு   சுதந்திரம்  பெற்றதிலிருந்து   கூட்டணியும்   அதன்  வழியே  வந்த  பிஎன்னும்  11  பொதுத்   தேர்தல்களில்   மூன்றில்- இரண்டு  பங்கு   பெரும்பான்மை  பெற்று   ஆட்சி    அமைத்தன.

12வது  பொதுத்  தேர்தலில்    ஆளும்  கூட்டணிக்குப்  பெரும்  பின்னடைவு   ஏற்பட்டது.  முதல்முறையாக   அது  மூன்றில்- இரண்டு   பங்கு   பெரும்பான்மையை   இழந்தது,   சில  மாநிலங்களும்  கைவிட்டுப்  போயின.

நான்காண்டுகளுக்குப்  பிறகு   நடந்த    பொதுத்   தேர்தலில்   அதே  நிலைதான்.  அது    மட்டுமல்ல.  மொத்த  வாக்குகளில்  பெரும்பான்மை  பெறவும்  அது   தவறியது.

இப்போது  14வது   பொதுத்   தேர்தல்   நெருங்கி  வரும்  வேளையில் ,  இனி    எந்தக்  கூட்டணிக்கும்   மூன்றில்-  இரண்டு   பங்கு   பெரும்பான்மை  கிடைக்கப்போவதில்லை    என்று  திட்டவட்டமாகக்  கூறினார்   அம்னோ   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்.

ஏனென்றால்  முன்போல்  இல்லாது  இப்போது   மலாய்க்காரர்  வாக்குகள் பிளவுபட்டுக்  கிடக்கின்றன  என்றவர்  சின்  சியு  டெய்லியிடம்  கூறினார்.

அம்னோ,  பாஸ்,  பிகேஆர்  தவிர்த்து   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டின்   பெர்சத்துவும்   மலாய்  வாக்குகளைப்  பெறப்  போட்டி   போடுகிறது.

வரும்  பொதுத்   தேர்தலில்   மலாய்   சுனாமி   ஏற்படும்   என்று   கூறப்படுவதையும்   நஸ்ரி   நிராகரித்தார்.   அது  டிஏபி  கட்டவிழ்த்து  விட்ட  ஒரு   பொய்    என்றார்.