இன்றைய  நிலை  எங்கு  போய்  முடியும்?

– கி.சீலதாஸ், ஏப்ரல் 2, 2018.

நமது  நாடு  சுதந்திரம்  பெற்று  அறுபது  ஆண்டுகளைத்  தாண்டிவிட்டது.  சுதந்திரத்திற்கு  முன்பு  நிலவிய  சூழ்நிலையை  நினைத்துப்  பார்க்கிறேன்.  அது  நிரந்தமற்ற  நிலை!  எதிலும்  பாதுகாப்பு இல்லாத  காலம்!  வெள்ளைக்காரன்  நம்மை  கட்டுப்பாட்டில்  வைத்திருந்தான்.  பேச்சுரிமை,  மனித  நேயம்  போன்ற  அடிப்படை  உரிமைகள்  மறுக்கப்பட்டன.  சுதந்திரம்  வேண்டும்  என்று  உரக்கக்  கோரியபோது,  அதில்  மக்கள்  இன,  மத  வேறுபாடுகளை  மூட்டை கட்டி  வைத்துவிட்டு  சுதந்திர  வேட்கைக்கு  முக்கியத்துவம்  கொடுத்தோம்.

அரை நூற்றாண்டுக்குள்  இரண்டு  உலகப் போர்களைச்  சமாளித்து  வெற்றிவாகை  சூடுவது  என்பது  இலேசான  காரியமல்ல.  பொருள்சேதம்,  உயிர் சேதம்  யாவும்  பிரிட்டனைத்  திக்குமுக்காடச்  செய்தது.  பிரிட்டனில்  பொருளாதார  கெடுபிடி,  போரினால்  விளைந்த  சமுதாயப்  பிரச்சினைகள்.  அதோடு,  இரண்டாம்  உலகப்  போரை  முடிவுக்குக்  கொண்டுவரும்  பொருட்டு  அமெரிக்கா,  ரஷியா,  பிராஞ்சு  மற்றும்  ஏனைய  நாடுகளோடு  காணப்பட்ட  உடன்பாடு,  அட்லாண்டிக் (Atlantic Charter)  பட்டயமாக  அறிவிக்கப்பட்டது.  அதில்  முக்கியமாக,  ஆசிய – ஆப்பிரிக்க  காலனிகளுக்கு  சுதந்திரம்  நல்குவதாகும்.

மலாயாவின்  சுதந்திரம்  விரைவுப்படுத்தப்பட்டது.  சுதந்திரம்  வந்தது. ஏழை  இந்தியர்களின்  நிலைமையில்  மாற்றம்  காணப்பட்டதா? நாட்டின் சுதந்திரத்திற்கு  மதிப்பளித்தோம்.  ஆனால்  இந்தியர்களின்  வாழ்வில் மட்டுமல்ல  சிறுபான்மையினரின்  வாழ்வில்  பொதுவாகச்  சுதந்திரம்  காணப்பட்டதா?  இந்தக்  கேள்விகளுக்குப்  பதிலைத்  தருவதைக்காட்டிலும்  அதைத்  தவிர்த்தவர்களின்  எண்ணிக்கைதான்  வலுவடைந்தது.

இங்கே,  அறுபது  ஆண்டுகளுக்குப்  பிறகு  நாட்டின்  நிலையை  எண்ணிப்பார்க்கும் போது,  எங்கும்  எதிலும்  முன்னேற்றம்.  அந்த  முன்னேற்றத்தின்  பலன்  யாருக்குப்  போய்  சேர்ந்தது?  திருப்திகரமானப்  பதில்  கிடைக்குமா?  பொதுவாக  எல்லா  மலேசிய  குடிமக்களும்   திருப்திகரமான  பொருளாதார,  சமூக  நல  வாழ்க்கையை  அனுபவிக்க  வழிவகுக்கப்பட்டதா?

காலனித்துவ  காலத்தில்  நிகழந்த  குற்றச்  செயல்களைக்  கண்ணுறும்போது  அவை  அவ்வளவு  பரவலாக  காணப்படவில்லை.  தெருக்களில்  வாகனங்கள்  குறைவாகக்  காணப்பட்டாலும்  விபத்துகள்  அவ்வளவாக  நிகழவில்லை. இன்று  கொடூரமான  வாகன  விபத்துகள்  சர்வசாதாரணம்.  காலனித்துவ  காலத்தின்போது  மனிதத்துவத்திற்கு  மதிப்பளிக்கப்படவில்லைதான்,  சுதந்திரத்கிற்குப்  பிறகு  மனிதத்துவத்திற்கு  மதிப்பு  என்பது  வெறும்  உதட்டளவோடு  நின்றுவிட்டதைக் காண்கிறோம்.  இன்றையக்  காலகட்டத்தில்  கொள்ளை,  கொலை,  மோசடி  ஊழல்  வழக்குகள்  பெருகிவிட்டன.  அறுபது  ஆண்டுகளுக்கு  முன்பு  காணாத  இனத்துவேஷம்;  இன்று  ஏதோ  அப்படிப்பட்ட  ஒரு  சொல்  சிலரின் உரிமையாகக்  கருதப்படுகிறது.  சுகாதாரத்தை  எடுத்துக்கொண்டால்  முன்னேற்றம்  காணப்பட்டிருந்தாலும்  அதை  பாதிக்கும்  அளவுக்கு  மக்கள்  நடந்து  கொள்வது  விசித்திரமாகும்.  இந்தக்  கொடுமையான  மனோபாவத்தைக்  களைய  எடுக்கப்படும்  நடவடிக்கை  அரசின்  நல்லெண்ணத்தைக்  கேள்விக்குறியாக்கி விடுகிறது.

எனவே,  இன்றைய  மலேசியாவைப்  பார்க்கும்போது  பலவிதமான  வேதனை  மிகுந்த வினாக்கள்  அலைஅலையாக  மோதி  விடைகளைத்  தேடுகின்றன:  வேதனைதான்  மீதமாகிறது.

நாடு  எனக்கு  என்ன  செய்தது  என்று  கேட்கவில்லை.  நாடு  ஏன்  இந்த  நிலைக்கு  தள்ளப்பட்டது  என்பதே  கேள்வி.  மலேசியர்களின்  கேள்வி.   அரசு  மீது  பலவிதமான  குற்றச்சாட்டுகள்.  அவை  உண்மையா?  புளுகுகளா?  அந்த  உண்மையை  மக்கள்  அறிந்து  கொள்ள  உரிமை  உண்டு  அல்லவா?  நெடுங்காலம்  அதிகாரத்தை  அனுபவித்தவர்கள்  மாற்றத்திற்கு இணங்குவது எளிதல்ல  என்பதும்  அனுபவம்  சொல்லும்  கதை.

புகழ்  வாய்ந்த  அமெரிக்க  கவிஞர்  லாரன்ஸ் ஃபெர்லிங்ஹெட்டி எழுதிய  கவிதை  நம்  நாட்டு  நிலையைக்  கவனத்தில்  கொண்டிருப்பது  போல்  தோன்றுகிறது.  அதை  உங்களோடு  பகிர்ந்து  கொள்கிறேன்.

 

நாட்டு மக்களோ,

ஆட்டு மந்தைகள் போல,

அவர்களை மேய்ப்பர்களோ,

தவறாக வழிநடத்திச்செல்லும்

பரிதாபம்!

 

நாட்டுத் தலைவர்களோ, ஏமாற்றுபவர்களாக,

கலங்கமற்றவர்களோ, ஊமையாக,

மதவெறியர்களோ அலைவரிசையை வேட்டையாடும்

பரிதாபம்!

 

நாட்டுக்கென குரல் ஏதுமில்லை,

ஆள்பவரைப் போற்றும் குரல் மட்டும் ஓய்ந்ததில்லை

வதைப்பவன் இங்கு வீரனாக,

அவனின் இலக்கோ கொடுங்கோல்

உபயோகித்து உலகை ஆள,

பரிதாபம்!

 

நாடு அதன் சொந்த மொழியையும்,

சொந்த கலாச்சாரத்தையும் தவிர

வேறேதும் அறிந்ததில்லை,

பரிதாபம்!

 

பணத்தையே சுவாசிக்கும் நாடு,

நன்கு உண்டுவிட்டு உறங்குபவன் உறக்கத்தில் திளைக்கும்

பரிதாபம்!

 

பரிதாபமான நாடு – பரிதாபத்திற்குரிய மக்கள்

தங்கள் உரிமைகள் சரிக்கப்படவும்,

தங்கள் சுதந்திரம் மூழ்கடிக்கப்படவும் விட்டுவிட்ட

பரிதாபம்!

 

என் நாடே, உம் கண்ணீர்,

இவ்வினிய சுதந்திர மண்ணில்.

 

(ஆக்கம் : லாரன்ஸ் ஃபெர்லிங் ஹெட்டி.  மொழிபெயர்ப்பு : மோனாலிசா முனியாண்டி)

 

நமது  சுதந்திரத்தை  அனுபவிக்க  முடிகிறதா?  அனுபவிக்கவிடுகிறார்களா?  இவைதான்  நம்மைச்  சிந்திக்க  வைக்கின்றன.